விஜயவாடா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர சட்ட மேலவை துணைத் தலைவர் ஜகியா கசம் நேற்று பாஜகவில் இணைந்தார். விஜயவாடாவில் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி முன்னிலையில் இவர் அக்கட்சியில் இணைந்தார்.
நிகழ்ச்சியில் புரந்தேஸ்வரி பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் ஜகியா இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
ஜகியா கசம் பேசுகையில், “ஒவ்வொருவருக்கும் சம உரிமையை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தியுள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு நம்பிக்கை அளித்த ஒரே பிரதமர் மோடி ஆவார். முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திடம் இருந்து ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புவதற்காக நான் பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார்.
முன்னதாக சட்டமேலவை துணைத் தலைவர் பதவியை ஜகியா கசம் ராஜினாமா செய்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை விட்டும் விலகினார். கடந்த 2 வருடங்களாக அவர் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்தனர்.