இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக கடந்த வாரம் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். இதனை அடுத்து போர் சூழல் தற்போது குறைந்துள்ள நிலையில் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படாமல் வட இந்தியாவில் உள்ள ஆறு மைதானங்களில் மட்டும் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. ஜூன் மூன்றாம் தேதி பைனல் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் வைத்து பார்க்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளன. மறுபுறம் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகள் கிட்டத்தட்ட தங்களது பிளே ஆப் வாய்ப்பை இறுதி செய்துள்ளனர். எனவே மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு தான் ஐந்து அணிகள் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒரே வாரத்தில் மீண்டும் திரும்பினாலும் சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அணியின் காம்பினேஷன் பாதிக்கப்படும் என்று அணி நிர்வாகம் கவலை அடைந்துள்ளனர்.
வெளிநாட்டு வீரர்கள் இருக்க மாட்டார்கள்
ஐபிஎல் முடிவதற்குள் சில சர்வதேச போட்டிகள் தொடங்க உள்ளதால் வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாட்டிற்காக விளையாட உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஓவர்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் மேற்கிந்திய தீவுகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளதால் மீதும் உள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படும் நிலையில், ஷாம் கரன் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஐபிஎல் நிர்வாகம் ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு அணிகளுக்கும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்த வீரர்கள் இந்த ஆண்டு மட்டுமே விளையாட முடியும் என்றும் அவர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லி கேப்டன் அணி ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கு பதிலாக முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள்
டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டெவால்ட் ப்ரீவிஸ், சாம் கர்ரன் (அவுட்), ஜேமி ஓவர்டன் (அவுட்), நாதன் எல்லிஸ், நூர் அஹமட், மதீஷா பத்திரனா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள்
ஷிம்ரோன் ஹெட்மியர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், வனிந்து ஹசரங்க, ஜோஃப்ரா ஆர்ச்சர் (அவுட்), நந்த்ரே பர்கர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, குவேனா மபாகா, மஹீஷ் தீக்ஷனா
ராஜஸ்தான் ராயல் அணி ஏற்கனவே நந்த்ரே பர்கரை மாற்று வீரராக அறிவித்துள்ளது. ஆர்ச்சருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளதால் அவர் ஐபிஎல் போட்டிக்கு திரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக இந்தியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் அதற்காக தயார் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல மற்ற அணிகலும் தங்களுக்கான மாற்று வீரர்களை தேடி வருகின்றனர்.