ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சி தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களைக் கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. மேலும் வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சியும் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 127-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
45 ஆயிரம் மலர் தொட்டிகள்: இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமென்டல் கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் போன்ற 275 வகையான விதைகள், செடிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 7.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மலர்மாடம் உள்பட பல இடங்களில் 45 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
ராஜராஜ சோழனின் அரண்மனை உருவம்.. விழாவின் முக்கிய அம்சமாக பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் சோழர் பரம்பரை பெருமை குறித்து விளக்கும் வகையில் ராஜராஜ சோழனின் அரண்மனை உருவம் 2 லட்சம் காரனேசன் உட்பட பல்வேறு மலர்களால் அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் சோழ அரசின் பெருமையை விளக்கும் வகையில் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை உருவம் 65 ஆயிரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமான மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கள்ளிச்செடி மாளிகை மற்றும் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு அங்கும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சுற்றுலா பயணிகள், குழந்தைகளைக் கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி இந்த முறை 11 நாட்கள் நடப்பதால் பூந்தொட்டிகள் மற்றும் மலர் செடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் விடுமுறை: பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அரங்கமும், பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சுமார் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.