இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் தயாரித்தால் ஐபோன் விலை ரூ.3 லட்சமாக அதிகரிக்குமா? – நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் பேசியதாகவும், இந்தியாவில் ஆப்பிளின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த எதிர்வினைகள் எழுந்துள்ளன.

அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பதிலளித்த மராத்தா வர்த்தகம், தொழில்கள், மற்றும் வேளாண்மை சபையின் (எம்சிசிஐஏ) இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் கிர்பேன் கூறியதாவது:

இந்தியா, சினா, வியட்நாமை தவிர்த்து அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்க முடிவு செய்தால் அதன் விலை 3,000 டாலர்களாக அதிகரிக்கும். இது, இந்தியாவில் தயாரிக்கும் செலவான 1,000 டாலருடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம். அமெரிக்க நுகர்வோர்கள் ஐபோனை 3,000 டாலர்களை கொடுத்து வாங்க தயாராக இருப்பார்களா? என்பதை ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க நிர்வாகமும் தெளிவாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தற்போது, ஆப்பிளின் உற்பத்தியில் 80 சதவீதம் சீனாவில் நடைபெறுகிறது. அங்கு அதனால் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களைஅறிவித்தபோது, விநியோகச் சங்கிலியை பன்முகப்படுத்த சில உற்பத்தி மையங்களை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனவே, வேலைவாய்ப்பு, உற்பத்தி என்பது அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயரவில்லை. மாறாக அவை சீனாவிலிருந்து மட்டுமே இந்தியாவுக்கு இடம்பெயருகின்றன. காலப்போக்கில் இந்த விவகாரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.

இவ்வாறு பிரசாந்த் கிர்பேன் தெரிவித்தார்.

கேபிஎம்ஜியின் முன்னாள் பங்குதாரரான ஜெய்தீப் கோஷ் கூறுகையில், “ கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025 நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி மதிப்புள்ள ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன, இது கடந்த ஆண்டு ரூ.1.2 லட்சம் கோடியாக இருந்தது. ஆப்பிள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தால், அது இந்திய சந்தைகளில், குறிப்பாக வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.