மதுரை: “இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் விருப்பம்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவரின் விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அனைவரும் ஓரணியில் வந்தால் இதை நிறைவேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால், கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களின் நலன் கருதி ஓரணியில் திரள முடிவெடுக்க வேண்டும். இதை தவிர்த்து கட்சித் தலைவர்கள் அவரவர்கள் எடுக்கும் முடிவு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது வருத்தம் அளிப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் உள்ளார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஏற்கெனவே கூட்டணியில் இருப்பதால் அவரை சந்திக்காமல் இருந்திருக்கலாம். இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர்.
அடுத்த தேர்தலிலும், அதற்கு அடுத்தத் தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். யார் முதல்வர் என்பதை மக்கள் தான் முடிவெடுப்பார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணி சம அளவு தொகுதிகளில் போட்டியிட்ட சமயத்தில் யார் முதல்வர் என்ற பிரச்சினை எழுந்தபோது, மக்கள் தான் முதல்வரை தேர்வு செய்வார்கள் என எம்ஜிஆர் கூறினார். அந்த தேர்தலில் மக்கள் எம்ஜிஆரை முதல்வராக தேர்வு செய்தனர். இதனால் முதல்வர் யார் என்பதை மக்கள்தான் தேர்வு செய்வார்கள்.
இந்தியாவை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை எந்த விதத்திலும் குறை சொல்லக் கூடாது. ராணுவ வீரர்களை தவறாக பேசியது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் தான் கேட்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் ஏற்கெனவே உள்ள ஆங்கிலம், தமிழ் போக மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம். அந்த மூன்றாவது மொழி இந்தியாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல. இன்னொரு மொழியின் கலச்சாரத்தை தெரிந்து கொள்வதில் தவறு இல்லை.
தற்போது பெரியவர்களை விட குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்துவதில் கில்லாடியாக உள்ளனர். அறிவியல் முதிர்ச்சி, வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தவறில்லை. குடியரசுத் தலைவர், ஆளுநர், நீதிமன்றங்களுக்கு தனித்தனி அதிகாரங்கள் உள்ளன. இதில் விதிமீறல் இருக்கக்கூடாது. நீதிமன்றமே சட்டம் நிறைவேற்றும் என்றால் அரசியலமைப்பு தேவையில்லாமல் போய்விடும்.
தமிழகத்தில் பாஜக ஏற்கெனவே வளர்ந்துள்ளது. அடுத்து பாஜவை ஆளும் கட்சியாக கொண்டு வர வேணடும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதற்கு மதுப் பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முறையாக கையாளவில்லை” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மாரிசக்கரவர்த்தி உடனிருந்தனர்.