திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? – ஆர்.எஸ்.பாரதி நேர்காணல்

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது திமுக ஆட்சி. இந்த நான்கு ஆண்டுகளில் தாங்கள் செயல்படுத்திய திட்டங்களைச் சொல்லி சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. அதேசமயம், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலைகளை வாக்குகளாக அறுவடை செய்ய ஆயத்தமாகிறது எதிர்க் கூட்டணி. இப்படியான சூழலில், “அதிருப்தியில் இருப்பவர்கள் 30 சதவீதம் பேர் தான்… மீதி இருக்கும் 70 சதவீத மக்கள் இந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் என நினைக்கிறார்கள்” என்கிறார் திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அதுகுறித்து அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசியதிலிருந்து…

நான்காண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டாலும், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குற்றச்சாட்டுகளால் சரிவு இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளன. திமுக ஆட்சியில், இங்கொன்றும் அங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடந்தாலும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பாரபட்சமின்றி முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்திய அளவில் சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

பொள்ளாச்சி வழக்கில் நாங்கள் நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டோம். ஆனால், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் திமுக முறையான விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்கிறாரே இபிஎஸ்?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய பின்பு தான், 3 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிஐ விசாரணை வந்த பிறகுதான் அதிமுக பிரமுகர்கள் நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். இதையெல்லாம் மூடி மறைக்க இபிஎஸ் நினைக்கிறார். இப்போதும் கூட, அதிமுக-வினர் சிலரை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க விட்டு விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-யான சுப்பராயன் தெரிவித்து இருக்கிறார்.அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் முதல்வர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். இது தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்தார். எனவே, இவ்விரு சம்பங்களையும் ஒன்றாக ஒப்பிட முடியாது.

சினிமாக்களில் இரண்டாம் பாகம் வெற்றி பெறாதது போல், திராவிட மாடல் ஆட்சியின் 2.0 வெர்ஷன் ஃபெயிலியர் ஆகிவிடும் என்கிறாரே ஆர்.பி.உதயகுமார்..?

தமிழகத்தில் 1971-ல் திமுக-வும், 2016-ல் அதிமுக-வும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளன. அதோடு, கடந்த மக்களவைத் தேர்தலில், 222 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதே கூட்டணியே தற்போதும் நீடிப்பதால், அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் இரண்டாவது முறையாக முதலமைச்சரானது போல் தளபதி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார்.

அதிமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீது தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையே?

முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்பது முக்கிய காரணம். உதாரணத்துக்கு, செந்தில்பாலாஜி மீதும் ராஜேந்திர பாலாஜி மீதும் ஒரேவிதமான குற்றச்சாட்டுகள்தான் சுமத்தப்பட்டன. முடிக்கப்பட்ட செந்தில் பாலாஜி வழக்கில், அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால், அதே மாதிரியான குற்றத்தை செய்த ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரவே ஆளுநர் அனுமதி கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு தான் அனுமதி கொடுத்துள்ளார்.

ஆட்சிக்கு வந்த பிறகு கரோனாவை எதிர்கொள்வதிலும், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தினோம், பழிவாங்கும் எண்ணத்துடன் எந்தச் செயலிலும் நாங்கள் ஈடுபடவில்லை. ஜெயலலிதாவுக்கே 19 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தண்டனை வாங்கித் தந்தோம். அதனால் பொறுத்திருந்து பாருங்கள்.

பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் இண்டியா கூட்டணியை திமுக கட்டமைத்தது போல், திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதை துரோகம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

2021-ல் இதே கூட்டணியை வென்றுதான் நாங்கள் ஆட்சி அமைத்தோம். அதன்பின், அவர்கள் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு, பேசிய பேச்சுகளை மக்கள் மறக்கமாட்டார்கள். உடைந்த கண்ணாடி ஒருபோதும் ஒட்டாது. இபிஎஸ் குடும்ப உறவுகள் மீது நடவடிக்கை பாயும் என மிரட்டல் விடுத்த உடன், கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு விட்டனர். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி என்பது, இபிஎஸ்ஸுக்கும் அமித் ஷாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் என்றுதான் சொல்ல முடியும். அதிமுக-வின் கீழ் மட்டத் தொண்டர்கள் இந்தக் கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாமக தலைவர் ராமதாஸ் திமுக-வுடன் கூட்டணி வைக்கும் மனநிலையில் இருப்பதாகவும், அன்புமணி தான் அவருடன் முரண்படுவதாகவும் சொல்கிறார்களே?

ஹேஷ்யங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா?

அது குறித்து தலைவர் தான் முடிவு எடுப்பார்.

திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்த வேண்டுமென அமித் ஷாவிடம் இபிஎஸ் வலியுறுத்தி இருக்கிறாராமே..?

எத்தனை வழக்குப் போட்டாலும் திமுக அதனை சந்திக்கும். மேற்கு வங்கத்தில் ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மம்தா கட்சி பிரமுகரை, பாஜக தங்கள் கட்சியில் சேர்த்து, முதல்வர் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, எங்கள் மீது உள்நோக்கத்துடன் வழக்குப் போட்டால், மக்களுக்கு எங்கள் மீது சிம்பதி தான் வரும்.

டாஸ்மாக் எம்டி-யான விசாகன் உள்ளிட்டோர் வீடுகளில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருக்கிறதே..?

அமலாக்கத்துறையின் செயல்பாடு அனைவரும் அறிந்த ஒன்றுதான். உச்ச நீதிமன்றமே அமலாக்கத்துறையின் செயல்பாட்டைக் கண்டித்து இருக்கிறது. அது மட்டுமல்ல… தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி பிடிபட்டுள்ளார். ஆக, ஏதோ ஒரு நோக்கத்தில் பாஜக அரசு இந்தச் சோதனையைச் செய்கிறது என்று சொன்னால், அதற்குரிய பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.

மேற்கு வங்க பாணியில், செந்தில்பாலாஜிக்கும் நெருக்கடி கொடுக்கப்படுகிறதோ?

கொங்கு மண்டலத்தில் பாஜக-வின் செல்வாக்கை செந்தில்பாலாஜி தரைமட்டமாக்கி விட்டார். அதனால், அவர் மீது கோபம் கொண்டு அடக்குமுறைகளை ஏவி விடுகின்றனர்.

ஆளுநர் விவகாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நீதிமன்றங்கள் மூலமே தீர்வு பெற நினைப்பது சரியான வழிமுறையா..?

சட்டமன்ற உரிமைகளுக்கு ஒன்றிய அரசு மதிப்புக் கொடுக்காததால் தான் நீதிமன்றத்தை நாட வேண்டி வருகிறது. தற்போது மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. குடியரசுத் தலைவரை கொண்டு உச்ச நீதிமன்றத்தைக் கேள்வி கேட்க வைக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இது போன்ற கேவலமான சம்பவங்கள் நடந்ததில்லை. இதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

“திமுக கரை வேட்டி கட்டியவர்கள், நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது, கைகளில் கயிறு கட்டிக்கொள்ளக்கூடாது” என்ற ஆ.ராசாவின் பேச்சு ஏற்புடையதுதானா?

அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று பார்க்க வேண்டும். அவர்களைப் போல், நீயும் (திமுக-வினர்) கயிறு கட்டினால், யார் சங்கி என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்ற நோக்கில் தான் அவர் அப்படிப் பேசியுள்ளார். பச்சைக்கொடிக்கும், பச்சை பாம்பிற்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா? அப்படி பார்த்தால், நாங்கள் கோயிலுக்குப் போகிறோம். பொட்டு வைத்துக் கொள்கிறோம். அதை சங்கிகள் போல், பகல்வேடம் ஆக்கக் கூடாது என்பதற்காக ஆ.ராசா கருத்துச் சொல்லியிருக்கிறார்.

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று அமித் ஷா அறிவித்துள்ள நிலையில், திமுக – அதிமுக என்ற இரு துருவ அரசியல் தமிழகத்தில் இனியும் தொடர வாய்ப்புள்ளதா?

கூட்டணி ஆட்சியை எந்தக் காலத்திலும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 1980-ல் காங்கிரஸும் நாங்களும், சரிபாதியாக பிரித்து போட்டியிட்டபோது கூட்டணி ஆட்சி என்று சொன்னதால் தான் தோல்வி அடைந்தோம்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் அநாகரிக பேச்சை தொடர்ந்து, அவர் மீது முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

மக்கள் அவரது பேச்சை விரும்பவில்லை. மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றபடி, முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

சில நேரங்களில் வெளிப்படையாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளும் சர்ச்சையாகி விடுகிறதே… இது கட்சி தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை உணர மாட்டீர்களா?

நான் எதுவும் தவறாக பேசுவதில்லை. அப்படி பேசி இருந்தால், தலைவர் என்னை கட்சியில் வைத்திருக்க மாட்டார். கேள்விகளுக்கு சற்று காரசாரமாக பதில் சொல்வேன். அதை ஜீரணிக்க முடியவில்லை என்றால் எப்படி? அதோடு, நான் சொல்வதை தவறாகப் புரிந்து கொண்டு, சிலர் ‘கட் அண்ட் பேஸ்ட்’ செய்து போடுகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.