திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் இலவச தரிசனத்திற்காக மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், ஏழுமலையானை வழிபட சுமார் 24 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்ற நிலை நிலவுகிறது. பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ள காரணத்தால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி, பால் ஆகியவை போன்ற அடிப்படை தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பதி கோவிலில் காத்திருப்பு மண்டபத்தில் இருந்த இரண்டு பெண்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் அங்கிருந்த மற்ற பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. திருப்பதி கோவிலுக்கு வந்த பக்தர்கள் இந்த சண்டையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.