புதுடெல்லி: போர்ச்சுகலில் போராட்டம் நடத்திய பாகிஸ்தானியர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை ஒட்டி இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
போர்ச்சுகல் நாட்டுக்கான இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போர்ச்சுகல் நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு வெளியே பாகிஸ்தானியர்கள் கோழைத்தனமாக போராட்டம் நடத்தினர். இதற்கு அமைதியாகபதிலடி தரும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் அலுவலகத்துக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ளது.
தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஆதரவு அளித்த போர்ச்சுகல் அரசுக்கும் அதன் காவல் துறையினருக்கும் நன்றி. இதுபோன்ற ஆத்திரமூட்டும் செயலால் இந்தியாவை மிரட்ட முடியாது. எங்கள் நிலைப்பாடு அசைக்க முடியாதது” என கூறப்பட்டுள்ளது. இத்துடன் அந்த போஸ்டர் தொடர்பான புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.