புதுடெல்லி: ரூ.6,200 கோடிக்கும் அதிகமான வங்கிக் கடன் மோசடி வழக்கின் பணமோசடி குற்றச்சாட்டில் யூகோ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சுபோத் குமார் கோயலை கைது செய்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் (ED) திங்கள்கிழமை (மே 19) தெரிவித்துள்ளது.
கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் (CSPL) நிறுவனத்துக்கு எதிராக விசாரிக்கப்படும் வழக்கில், சுபோத் குமார் கோயல் கடந்த 16-ம் தேதி புதுடெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மே 17-ல் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், மே 21-ல் அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் கோயல் மற்றும் சிலரின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சிஎஸ்பிஎல் நிறுவனத்துக்கு ரூ.6,210.72 கோடி வட்டி இல்லாமல் கடன்களை ‘ஒப்புதல்’ செய்ததில் பணமோசடி நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
யூகோ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக கோயல் இருந்த காலத்தில் அவர் சிஎஸ்பில் நிறுவனத்துக்கு அதிக கடன்களை வழங்க ஒப்புதல் அளித்ததாகவும், இதன் மூலம், சிஎஸ்பில் நிறுவனத்திடம் இருந்து கணிசமான தொகையை சட்டவிரோத பெற்றதாகவும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. சட்டவிரோதமான இந்த ஆதாயம் அடுக்கடுக்காக பல்வேறு நிறுவனங்கள் மூலம் செலுத்தப்பட்டு, சட்டப்பூர்வமான தன்மையின் தோற்றத்தைக் காட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“ஷெல் அல்லது போலி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட பல சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஷெல் நிறுவனங்கள் கோயல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று அது கூறியது. இந்த நிறுவனங்களின் நிதி ஆதாரம் சிஎஸ்பில் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை சேகரிக்கப்பட்ட சான்றுகள், லஞ்சப் பணத்தை சட்டப்பூர்வமான பணமாக மாற்றுவதற்காக நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளைக் காட்டுகின்றன,” என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சிஎஸ்பில் நிறுவனத்தின் முக்கிய விளம்பரதாரரான சஞ்சய் சுரேகா, 2024-ம் ஆண்டு டிசம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார், மேலும், இந்த ஆண்டு பிப்ரவரியில் கொல்கத்தா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இரண்டு உத்தரவுகளின் ஒரு பகுதியாக, சுரேகா மற்றும் சிஎஸ்பில் நிறுவனத்தின் ரூ.510 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.