பெங்களூரு: விரைவாக சார்ஜ் ஆகும் மற்றும் அதிக நேரம் நீடிக்கும் சோடியன் – அயன் பேட்டரியை பெங்களூரு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
எரிபொருள் விலையும் காற்றும் மாசுபாடும் அதிகரித்து வரும் இக்காலத்தில் மக்களுக்கு சிக்கனமான பயணத்தை வழங்கவும் காற்று மாசுபாட்டை குறைக்கவும் எலெக்ட்ரிக் வாகனங்கள் அவதரித்தன.
தற்போது இந்த வாகனங்கள் இயங்க தேவையான பேட்டரி, லித்தியம்-அயன் தொழில்நுட்பத்தில் உருவானதாக உள்ளது. இந்த பேட்டரிகளின் விலை அதிகமாக உள்ளது. இதற்கு உலக அளவில் லித்தியம் வளம் குறைவாக இருப்பதும் காரணமாக உள்ளது.
இந்நிலையில் லித்தியன் அயன் பேட்டரிக்கு மாற்றாக சக்திவாய்ந்த சோடியன்-அயன் பேட்டரியை பெங்களூரு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த பேட்டரி வெறும் 6 நிமிடத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஆகக் கூடியது. மேலும் அதிக நேரம் நீடிக்கக் கூடியது.
பேராசிரியர் பிரேம்குமார் செங்குட்டுவன் தலைமையிலான விஞ்ஞானிகள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பிப்லப் பத்ரா இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.