'அவர் கொலை செய்துவிட்டாரா?' – பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் புனே கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அந்தஸ்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேத்கர் (வயது 34). விதிமுறையை மீறி தனது சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியது, அலுவலகத்தில் தனியறை கேட்டு அடம் பிடித்தது, கூடுதல் கலெக்டரின் அறையை ஆக்கிரமித்தது போன்ற வெவ்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இதையடுத்து வாசிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். சர்ச்சைகளுக்கு மத்தியில் பூஜா கேத்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது குறித்து விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கிடையே பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர் நிலப்பிரச்சினையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல அவரது தந்தை திலீப் கேத்கர் அரசு அதிகாரியாக இருந்த போது 2 முறை லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேத்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இ-மெயில் ஐ டி, செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் பூஜா கேத்கர் முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் பூஜா கேத்கர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பூஜா கேத்கர் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது “விசாரணைக்கு பூஜா கேத்கர் ஒத்துழைக்கவில்லை” என்ற டெல்லி ஐகோர்ட்டின் கருத்தை ஏற்க மறுத்த நீதிபதி, “அவர் கொலை செய்துவிட்டாரா? இது போதைப்பொருள் தடுப்பு சட்ட வழக்கு இல்லை. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பார்” என்று தெரிவித்தார்.

அதே சமயம் டெல்லி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு, இந்த வழக்கில் போலி சான்றிதழ்கள் வழங்கி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க பூஜா கேத்கரை காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதி, போலி சான்றிதழ்களை பூஜா கேத்கர் எங்கிருந்து பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் அவரை காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பூஜா கேத்கர் கைது செய்யப்பட்டால் அவர் ரூ.35,000 பிணை தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அதே சமயம் அவர் சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.