அரக்கோணம்: அரக்கோணம் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலைக் கண்டித்து, அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி . தனது கணவரும் அரக்கோணம் திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளருமான தெய்வச்செயல் மீது அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவி சமீபத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று மாணவி தரப்பில் குற்றசம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், மாணவிக்கு ஆதரவாக அதிமுக சார்பில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதனடிப்படையில் இன்று காலை 9.30 மணி அளவில் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்ட்டம் நடத்த நகர காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர் . இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய 200- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதிமுகவினர் தடையை மீறி முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சு. ரவி, முன்னாள் மக்களவை உறுப்பினர் கோ.ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் நிர்வாகியான தெய்வச் செயலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையிலான அதிமுகவினர் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகசுந்தரத்திடம், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் புகார் மனு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களிடம் பின்னர் கூறும்போது, “அதிமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை ஊர் முழுக்க தூக்கி திரிந்தவர்கள், திமுக ஆட்சிக் காலத்தில் அக்கட்சியின் அரக்கோணம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசெயல் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து கால தாமதமாக நடவடிக்கை மேற்கொண்டது. அதிமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு என பல்வேறு விதமான சிறப்பு திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.
அதனால்தான் பெண்கள் படித்து அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. தற்போது தமிழக முதல்வர் அந்த திட்டங்கள் அனைத்தையும் கிடப்பில் போட்டதால் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார். இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மேலும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல் துறையினர் கைது செய்யாததை குறித்து கேட்டபோது மேல் இடத்து உத்தரவு காரணமாக கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.