டெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். குறிப்பாக அவர் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் நூர் அகமது ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நடப்பு தொடரில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஐ.பி.எல் தொடர் வரலாற்றில் சி.எஸ்.கே அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் நூர் அகமது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் ஒரு சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருந்தனர்.
தற்போது அவர்களைப் பின்னுக்கு தள்ளி நூர் அகமது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் 26 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். அவர் கடந்த 2019 ம் ஆண்டில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஐ.பி.எல் சீசனில் சி.எஸ்.கே-வுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியல்:
இம்ரான் தாஹிர் – 26 (2019)
நூர் அகமது – 21 (2025)*
ரவிச்சந்திரன் அஸ்வின் – 20 (2011)
ரவீந்திர ஜடேஜா – 20 (2023)