சென்னை: கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரில் வசிக்கும் ஜி.சரளா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த 1999-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறேன். என்னைப்போல 100 பேர் இப்பகுதியில் வீடு மற்றும் கடைகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நான் கடை நடத்தி வரும் நிலம் கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமானது என கூறி, அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர். அதன்பிறகு நிலத்துக்கான தரை வாடகையை அறநிலையத்துறைக்கு வழங்க சம்மதம் தெரிவித்தோம்.
அதையேற்க மறுத்த அதிகாரிகள், 15 நாட்களுக்குள் இடத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் என கூறிச் சென்றனர். இதனால் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கு விசாரணையின்போது, இந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, அங்கு காவல் நிலையம் அமைக்கவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்றம், எங்களது மனுக்களை பரிசீலித்து அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் அதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸாரை குவித்து, எனது கடை உள்ளிட்ட அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். இந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்வரை எனது கடை இருந்த நிலத்தை கையகப்படுத்த அறநிலையத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எந்தவொரு விதிகளையும் பின்பற்றாமல் ஜேசிபி இயந்திரம் மூலமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்களை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும், இந்த நிலத்தை அறநிலையத்துறை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.