ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் அபுஜ்மத் காடுகளில் நடந்த ஒரு தீவிர மோதலில் பசவராஜு என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட் தலைவர் நம்பலா கேசவ் ராவ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் முக்கிய திருப்புமுனை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் பொதுச் செயலாளர் பசவராஜு, அபுஜ்மத் காடுகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட 26 மாவோயிஸ்டுகளில் இவரும் ஒருவர். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய மாவோயிஸ்ட் எதிர்ப்பு வெற்றிகளில் ஒன்றாகும்.
சுமார் 70 வயதான பசவ ராஜு, இந்தியாவில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது ‘தலைக்கு ரூ.1.5 கோடி’ பரிசு அறிவிக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜியன்னாபேட்டா கிராமத்தைச் சேர்ந்த இவர், வாரங்கலில் உள்ள பிராந்திய பொறியியல் கல்லூரியில் (REC) பிடெக் பட்டம் பெற்றவர் ஆவார். 1970-களில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த இவர், கங்கண்ணா, கிருஷ்ணா, நரசிம்மா, பிரகாஷ் உள்ளிட்ட பல மாற்றுப் பெயர்களில் செயல்பட்டார்.
1980-இல் சிபிஐ-எம்எல் (மக்கள் போர்) அமைப்பதில் பசவராஜு முக்கிய பங்கு வகித்தார், மேலும் 1992-இல் அதன் மத்திய குழுவின் ஒரு பகுதியாக உயர்ந்தார். 2004-ஆம் ஆண்டு மக்கள் போர் குழு மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் (MCC) இணைந்த பிறகு கட்சியின் முதல் பொதுச் செயலாளராக இருந்த முப்பலா லட்சுமண ராவ் என்று அழைக்கப்படும் கணபதிக்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டு சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளரானார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியை வழிநடத்திய கணபதி பிலிப்பைன்ஸுக்கு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது. இந்தியாவில் நடந்த மிகக் கொடிய மாவோயிஸ்ட் தாக்குதல்களில் சிலவற்றை மூளையாக இருந்து செயல்படுத்தியவர் பசவ ராஜு ஆவார். மாவோயிஸ்ட் தாக்குதல்களில் முக்கிய திட்டமிடுபவர் பசவராஜு. 2010-ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் சிந்தல்னாரில் 76 சிஆர்பிஎப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதிலும், 2013-ம் ஆண்டு ஜிராம் காட்டியில் நடந்த தாக்குதலில் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதிலும் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
மேலும், அவரது சமீபத்திய புகைப்படம் எதுவும் பதிவு செய்யப்படாததால், அவரைக் கண்காணிப்பது மிகவும் கடினமாக இருந்தது. அவர் முக்கியமாக சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்து வரும் மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு பசவராஜுவின் மரணம் ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.