புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ரூ.142 கோடி பெற்றதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 1937-ம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008-ம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது.
இந்த சூழலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சத்தை மட்டும் செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. மீதமுள்ள ரூ.89.50 கோடியை காங்கிரஸ் ரத்து செய்தது. இதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை யங் இந்தியா பிரைவேட் நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது.
இந்த வழக்கில் முதல்கட்ட குற்றப் பத்திரிகையை கடந்த மாதம் 9-ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சாம் பித்ரோடா, சுமன் துபே உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 12-ம் தேதி வழக்கில் தொடர்புடைய ரூ.661 கோடி மதிப்பிலான சொத்துகள், ரூ.90 கோடி மதிப்பிலான பங்குகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன் அமலாக்கத் துறை தனது ஆரம்ப வாதங்களை முன்வைத்தது. அமலாக்கத் துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) எஸ்.வி. ராஜு, “நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக ரூ. 142 கோடி பெற்றுள்ளனர். எனவே, காந்தி குடும்பத்தினர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்கள் மீது பணமோசடி தொடர்பான வழக்கில் போதுமான ஆதாரம் உள்ளது.” என தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஜூன் 26, 2014 அன்று, நேஷனல் ஹெரால்டு தொடர்பாக தனிப்பட்ட புகாரை தாக்கல் செய்திருந்தார். அவருடைய குற்றச்சாட்டுகளை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கவனத்தில் கொண்ட பிறகு, 2021 இல் அமலாக்கத் துறை முறையாக தனது விசாரணையைத் தொடங்கியது.
இன்றைய விசாரணையில், வழக்கில் முக்கிய புகார்தாரராக இருக்கும் சுப்ரமணியன் சுவாமிக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு நீதிபதி கோக்னே அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், சோனியா மற்றும் ராகுல் காந்தியின் வழக்கறிஞர்கள், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தங்கள் சமர்ப்பிப்புகளைத் தயாரிக்க அவகாசம் அளித்து, இந்த வழக்கை அடுத்த மாதத்துக்கு பட்டியலிடுமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.