பெங்களூரு மழை பலி 5 ஆக அதிகரிப்பு: இன்றும் நகருக்கு கனமழை எச்சரிக்கை விடுப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், பெங்களூருவுக்கு இன்றும் (மே.21) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் கெங்கேரி, ஹெச்.ஏ.எல், மாரத்தஹள்ளி, ஹென்னூர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் 105.5 மிமீ மழை பதிவானது. இதனால் அந்த பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடந்த 1909-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி பெங்களூருவில் 153.9 மிமீ மழை பதிவானது. இதற்கு அடுத்தப்படியாக 2011-ம் ஆண்டில் மே மாதத்தில் 112 மிமீ மழையும், 2022-ம் ஆண்டு மே மாதத்தில் 114.6 மிமீ மழையும் பதிவானது. இதற்கு பிறகு நடப்பாண்டில் நேற்று முன் தினம் பெய்த 136 மிமீ மழையே அதிகபட்சமாக உள்ளது.

கனமழை காரணமாக பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள இஸ்மோ (IZMO) லிமிடெட் நிறுவனத்தில் பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்த 35 வயதுடைய சசிகலா என்ற பெண், சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். தெற்கு பெங்களூருவில் வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முயன்றபோது, ​​63 வயதான மன்மோகன் காமத் மற்றும் 12 வயது தினேஷ் ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

மேலும், கர்நாடகாவின் ராய்ச்சூர் மற்றும் கார்வாரில் தனித்தனி மின்னல் தாக்குதல் சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் சமீபத்திய கனமழையால் மொத்த இறப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

அதிதீவிர கனமழை பொழிய வாய்ப்பு: பெங்களூருவில் நேற்று முழுவதும் கனமழை பொழிந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் (புதன்கிழமை) பெங்களூருவுக்கு கனமழை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு பெங்களூருவில் 64.5 மிமீ முதல் அதிகபட்சமாக 115.5 மிமீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களிலும், மலைப்பகுதி மாவட்டங்களிலும் அதிதீவிர கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும், பெங்களூருவில் மே 25 ஞாயிற்றுக்கிழமை வரை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மத்திய அரபிக்கடலில் மே 21 ஆம் தேதி வாக்கில் மேல் காற்று சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மே 22ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தீவிரமடையக்கூடும். இவை மேலும் மழைப்பொழிவை உருவாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தல்: வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பல தொழில்நுட்ப நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்ப்பை உறுதி செய்யும் வகையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை அறிவித்தன.

பெங்களூருவில் ஆர்.ஆர். நகர் மண்டலத்தின் சில பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை பதிவான மழையை விட திங்கள்கிழமை இரவு 150 மிமீ மழை பெய்தது. இதுகடந்த கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான மழையாகும். அதிக மழைப்பொழிவு இருந்தபோதிலும், ஆர்.ஆர். நகர் மண்டலம் வெள்ளப்பெருக்கு சம்பவங்களை எதிர்கொள்ளவில்லை. இப்பகுதியில் தண்ணீர் தேங்காததற்கு சிறந்த நீர் மேலாண்மையே காரணம் என்று அதிகாரிகள் கூறினர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.