"மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது.." – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி,

மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது – ஒவ்வொன்றும் அதன் சொந்தக் குரலைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியம்.

மோடி அரசாங்கம் கவர்னர்களை தவறாகப் பயன்படுத்தி அந்தக் குரல்களை நசுக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைத் தடுக்கிறது.

இது கூட்டாட்சியின் மீதான ஆபத்தான தாக்குதல், இதை எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக 8 மாநில முதல்-மந்திரிகளுக்கு எழுதிய கடிதம் தொடர்பான பதிவையும் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதள பதிவில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக மேற்கு வங்காளம், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி இருந்த அந்த கடிதத்தில், ‘மத்திய அரசின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி, கடந்த மே 13, அன்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143 இன் கீழ், சுப்ரீம்கோர்ட்டின் ஆலோசனை அதிகார வரம்பைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தின் முன் 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்தக் குறிப்பு எந்த மாநிலத்தையோ அல்லது தீர்ப்பையோ குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாடு அரசு தமிழக கவர்னருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்த தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம். வெளிப்படையாக, பாஜக இந்தத் தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது. இது ஒரு பிடிவாதமான கவர்னரை எதிர்கொள்ளும்போது மற்ற மாநிலங்களால் ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தப்படலாம்.

இந்த முக்கியமான கட்டத்தில், பாஜகவை எதிர்க்கும் மற்றும் நமது கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களையும் வரவிருக்கும் சட்டப் போராட்டத்தில் ஒன்றுபடுமாறு நான் அழைப்பு விடுத்திருந்தேன். சுப்ரீம்கோர்ட்டில் ஜனாதிபதி கோரிய இந்தக் குறிப்பை எதிர்க்குமாறு உங்களை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்வதற்காக நான் இப்போது உங்களுக்கு எழுதுகிறேன். நமது சுப்ரீம்கோர்ட்டு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் உறுதி செய்துள்ளபடி, நீதிமன்றத்தின் முன் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஒரு ஐக்கிய முன்னணியை முன்வைக்க வேண்டும்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.