விண்வெளியில் இருந்து தாக்கினாலும் பாதுகாப்பு… கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் தீவிர ஆர்வம்

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவில் ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அலாஸ்காவில், இடைமறித்து தாக்கும் அமைப்புகள் உள்ளன. இதுதவிர, வான் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அவற்றுடன் மற்றொரு புதிய பாதுகாப்பு அமைப்பாக கோல்டன் டோம் ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, குடியரசு கட்சி உறுப்பினரான அமெரிக்காவின் 40-வது ஜனாதிபதி ரொனால்டு ரீகன் இதனை அமைக்க விரும்பினார் என்றார்.

வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு கவசம் ஒன்றை கட்டமைப்பது என அமெரிக்க மக்களுக்கு, தேர்தல் பிரசாரத்தின்போது நானும் வாக்குறுதி அளித்திருந்தேன் என மீண்டும் கூறினார்.

இதன்படி, ரூ.14 லட்சத்து 97 ஆயிரத்து 833 கோடி (175 பில்லியன் அமெரிக்க டாலர்) திட்ட மதிப்பில் இந்த கோல்டன் டோம் கட்டப்பட உள்ளது என கூறினார். அதற்கான திட்ட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு விட்டது. இதனை விண்வெளி நடவடிக்கைகளுக்கான துணை தலைவர் மைக்கேல் கட்லெயின் மேற்பார்வை செய்வார்.

இந்த டோம் முழு அளவில் கட்டி முடிக்கப்பட்டதும், உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும் அதனை இடைமறித்து தாக்கும் திறன் பெற்றிருக்கும். விண்வெளியில் இருந்து தாக்கினாலும் கூட அது முறியடிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு கனடாவும் ஆர்வம் காட்டியுள்ளது என கூறப்படுகிறது. இதனால், இரு நாடுகளும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தில் ஈடுபட கூடும். டிரம்பின் இந்த அறிவிப்பின்போது, அமெரிக்க பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத், செனட் உறுப்பினர்கள் சுல்லிவன், ஜிம் பேங்க்ஸ் மற்றும் கிரேமர் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த திட்டம் முற்றிலும் அமெரிக்காவிலேயே உருவாக்கப்படும் என வலியுறுத்திய டிரம்ப், இஸ்ரேலின் அயன் டோமை அது ஒத்திருக்கும் என்றும் கூறினார். சீனா, ரஷியா, ஈரான் மற்றும் வடகொரியா போன்ற வேறு கண்டங்களில் உள்ள நாடுகளிடம் இருந்து வர கூடிய ஏவுகணைகளையும் கூட அது முறியடிக்கும். அதனால், கோல்டன் டோம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் டிரம்ப் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.