பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி ‘ஆபரேஷன் சிந்தூர்’.
மே 7-ம் தேதி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை தகர்த்தது இந்திய ராணுவம்.
இதுகுறித்து, ‘நாங்கள் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை மட்டும் தான் குறி வைத்தோமே தவிர, பாகிஸ்தான் ராணுவத்தை அல்ல’ என்று விளக்கமும் அளித்தது இந்திய ராணுவம்.
ஆனாலும், இந்தியாவின் மீது தாக்குதலைத் தொடங்கியது பாகிஸ்தான். இதற்கு இந்தியாவும் எதிர்வினையாற்றியது. இந்தத் தாக்குதல்கள் ஒருவேளை போராக மாறிவிடுமோ என்று உலக நாடுகள் பயந்துகொண்டிருந்த வேளையில், மே 10-ம் தேதி இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது.

இதற்கான முதல் படியை எடுத்து வைத்தது பாகிஸ்தான் தான். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே இந்தத் தாக்குதல் நடந்தாலும், பாகிஸ்தான் தான் மிகுந்த சேதத்தைச் சந்தித்தது. இதன் விளைவாகவே பாகிஸ்தான் இந்தியாவிடம் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டது.
தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தியாவிற்கு ‘அப்படி பதிலடி கொடுத்தோம்’, ‘இப்படி பதிலடி கொடுத்தோம்’ என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால், ‘அவை அனைத்தும் பொய்’ என்று நிரூபிக்கும் விதமாக, இந்திய ராணுவம் தாக்குதல் வீடியோக்களையும், இந்திய தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதத்தின் சாட்டிலைட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு பதவி உயர்வை வழங்கி உள்ளது, அந்நாட்டு அரசு.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் அறிக்கைப் படி, ‘ஆபரேஷன் பன்யன்-உம்-மர்சூஸ் மூலம் எதிரிகளுக்கு தகுந்த பதிலடிகளை தந்துள்ளார் அசிம் முனீர். இவரது தலைமையின் கீழ், பாகிஸ்தான் ராணுவம் நம் நாட்டைப் பாதுகாத்துள்ளது. இதற்காக, பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த சையத் அசிம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கப்படுகிறது”.
ஃபீல்ட் மார்ஷல் என்பது பாகிஸ்தனின் மிக உயரிய ராணுவப் பதவி. பாகிஸ்தான் நாட்டிலேயே இந்தப் பதவியைப் பெறும் இரண்டாவது நபர் இவர்தான்.

1959-ம் ஆண்டு, பாகிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை ஜெனரல் அயூப் கான் கைப்பற்றியபோது, அவரே அவருக்கு கொடுத்து கொண்ட பதவி இது.
அதன் பிறகு, இந்தப் பதவி இப்போது அசிம் முனீருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ வலைதளத்தின் தகவலின் படி, ஃபீல்ட் மார்ஷல் தான் பாகிஸ்தான் ராணுவத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முழு பொறுப்பு. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இவர் தலைமை ஆலோசகராக இருப்பார்.
ஃபீல்ட் மார்ஷலாக அசிம் முனீர் என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுப்பார்… எந்தக் கொள்கையை முன்மொழிவார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!