புதுச்சேரி: தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை போற்றும் வகையில் புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி சார்பில் தேசியக்கொடி பேரணி இன்று (மே 22) நடைபெற்றது.
தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து நோணாங்குப்பம் படகு குழாம் எதிரே உள்ள திருவள்ளுவர் சிலை வரை நடைபெற்ற பேரணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செல்வகணபதி எம்பி, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடி வண்ணம் கொண்ட பலூன்களை கையில் ஏந்தி சென்றனர்.
பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகளை கொண்டு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தி பிரதமர் மோடி வெற்றி கொடி நாட்டியுள்ளார்.
இதற்காக அந்த பெண் அதிகாரிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக வெற்றி பேரணி நடத்தியுள்ளோம். புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது இருந்த பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கி சேர்க்கை வழங்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து தெரிவித்துள்ளேன். அவர் அதற்கு தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.
அதேபோல் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, நானும் பொதுப்பணித்துறை அமைச்சரும் சந்தித்து கூடுதல் நிதிக்கான அனுமதி கேட்டு முதல்வர் கொடுத்த கடிதத்தை அளித்துள்ளோம். விரைவில் நிதியமைச்சருடன் கலந்தாலோசித்து கூடுதல் நிதி ரூ.4 ஆயிரம் கோடி கிடைப்பதற்கு ஆவணம் செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரிக்கு ரூ.1400 கோடி மேம்பால பணிக்கும், மானிய நிதியாக ரூ.200 கோடியும், காலாண்டு நிதி ரூ.750 கோடி உள்ளிட்ட நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. புதிய சட்டப்பேரவைக்கான கோப்பு இன்று செல்கிறது. இதுபோல் என்னென்ன நாம் கேட்டோமோ அனைத்தையும் மத்திய அரசு சிறந்த முறையில் நமக்கு வழங்கி வருகிறது.
புதுச்சேரி ரயில் நிலையம் மேம்படுத்த ரூ. 90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார். அப்போது, புதுச்சேரி பற்றி தமிழக அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சட்டப்பேரவைத் தலைவர், மதுவால் புதுச்சேரி தள்ளாடவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் உள்ளது. கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதுபோன்ற உயிரிழப்புகள் புதுச்சேரியில் ஏற்பட்டதில்லை.
பிரெஞ்சு நாட்டின் கலாச்சாரம் இங்குள்ள காரணத்தால் மது உள்ளிட்டவை இங்கு கிடைக்கிறது. இதனால் தான் தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநில மக்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களை நாம் யாரும் வாருங்கள் என்று அழைக்கவில்லை.
அதிகளவு சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். நல்ல மதுவை பருகிவிட்டு செல்கின்றனர். இதில் எங்கு புதுச்சேரி தள்ளாடுகிறது. தமிழகத்தில் தான் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடக்கிறது. எனவே புதுச்சேரி அரசு சார்பில் தமிழக அமைச்சர் சேகர் பாபுவை வன்மையாக கண்டிக்கின்றோம்.
புதுச்சேரிக்கு சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.