இஸ்லாமாபாத்: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை இந்தியா வெளியேற்றியதை அடுத்து, தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரை 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது. உளவு பார்த்ததன் அடிப்படையிலேயே அவர் வெளியேற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நடவடிக்கை என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மே 13 அன்று, உளவு பார்த்த குற்றத்தின் கீழ் பாகிஸ்தான் அதிகாரி ஒருவரை இந்தியா வெளியேற்றியது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு இந்திய அதிகாரியை வெளியேற்றவதற்கான உத்தரவை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் அறிக்கையின்படி, “இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை, முரணான செயல்களில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தான் அரசு அவரை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை தெரிவிக்க இந்திய தூதர் வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்திய தூதரக அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் தங்கள் சலுகைகள் மற்றும் அந்தஸ்தை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, இம்மாதம் 7-ம் தேதி இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது.
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களின் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த சம்பவத்தை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.