சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் மொத்தம் உள்ள 60 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதம் சீனர்கள் உள்ளனர். அவர்கள் மாண்டரின் மொழியை பேசுகின்றனர். அது தவிர மலாய் மக்கள் 15 சதவீதம் பேரும், இந்தியர்கள் சுமார் 7 சதவீதம் பேரும் உள்ளனர். அவர்கள் மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை பேசுகின்றனர்.
மாண்டரின், மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளும் சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். இதில் தமிழ் மொழி சிங்கப்பூரில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 1960-70களில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தமிழில் விவாதங்கள் நடந்துள்ளன.
இந்த நிலையில், தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் என சிங்கப்பூர் சட்டத்துறை மந்திரி கே.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி சங்கத்தின்(NUS TLS) 50-வது ஆண்டு நிறைவு விழாவில், மாணவர்களிடம் கே.சண்முகம் பேசியதாவது;-
“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழைத் துடிப்பாக வைத்திருக்க, உங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் எங்களுக்கு தேவை. அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மேடையில் சரளமாக தமிழ் பேசக்கூடிய அமைச்சர்கள் நம்மிடம் இருப்பார்களா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழை பேசாதவர்கள், இனி வரும் காலங்களில் தமிழை மரியாதைக்குரிய மொழியாக கருதுவார்களா? என்றும் நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டும். பிற மொழிகளை பேசுபவர்களுக்கு தமிழ் மொழி எளிதில் அணுகக்கூடிய ஒன்றாகவும், ஈடுபாட்டுடன் பேசக்கூடிய மொழியாகவும் இருக்க வேண்டும்.
வகுப்பறைகள் மற்றும் சமூக மையங்களுக்கு வெளியே உள்ள இடங்களிலும் தமிழ் மொழி இடம்பெற வேண்டும். பல இளைஞர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுகிறார்கள். இது தமிழ் மொழியை மட்டுமல்ல, மாண்டரின் மற்றும் மலாய் போன்ற பிற மொழிகளையும் பாதிக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.