நகைக் கடன் புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளுக்காக வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெறும்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (மே.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலன் கருதி, இந்தப் புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, தனியார் நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்கக் காசுகளின் தரத்தையும் பரிசோதித்து தங்கக் கடன் வழங்கவும் வலியுறுத்துகிறேன்

இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீத மக்களுக்குமேல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு அவசரத் தேவை ஏற்படின், அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து, நிலைமையை சமாளிக்கும் சராசரி மக்கள் ஆவார்கள்.

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நகை அடமானத்திற்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

>> இதுவரை, நகை மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் அளிக்கப்பட்டு வந்தது. இனி, 75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

>> நகை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்கள் இனி, இது தங்களது சொந்த நகைதான் என்பதற்கு உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும். அதாவது, கடன் வாங்குபவர்கள் தங்கத்தை வாங்கியதற்கான அசல் ரசீதுகள் இல்லையென்றால், ஒரு தகுந்த ஆவணம் அல்லது சுய சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

>> தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் வங்கிகளால் விற்கப்படும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் (22 காரட் அல்லது அதற்கு மேற்பட்ட தூய்மையுடன் இருக்கும் நகைகளுக்கு) மட்டுமே நகைக் கடன் வழங்க தகுதியானவை ஆகும்.

>> கடன் வரம்பு, தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

>> தங்கக் காசு அடமானம் வைத்தால், அது 50 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தங்கக் காசு, வங்கிகள் விற்கும் தங்கக் காசாக இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்கும் தங்கக் காசுகளுக்கு நகைக் கடன் கிடையாது.

>> தங்கக் கடனை முழுமையாக அடைத்தால்தான் புதிய கடன் வழங்கப்படும். இதுதவிர, மேலும் பல புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

>> தங்க நகைகளின் தரம், எடை, போன்றவைகள் துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும்.

மேற்கண்ட புதிய நிபந்தனைகளின்படி, தங்களின் அவசரத் தேவைகளுக்கு, சொந்த நகைகளின் பேரில் அருகில் உள்ள கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே, மக்கள் நலன் கருதி, இந்தப் புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, தனியார் நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்கக் காசுகளின் தரத்தையும் பரிசோதித்து தங்கக் கடன் வழங்கவும் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.