பெங்களூரு: மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா பாட்டியாவை அச்சோப்பினைத் தயாரிக்கும் கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிட்டர்ஜெண்ட் லிமிட் (கேஎஸ்டிஎல்) நியமித்துள்ளது சிலரின் எதிர்பினைச் சந்தித்துள்ளது.
கர்நாடகா அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மைசூர் சேண்டல் சோப்பின் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா பாட்டியா, 2 ஆண்டுகள், இரண்டு நாட்களுக்கு ரூ.6.2 கோடிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தது.
தமன்னாவின் நியமனம் சமூகத்தின் சில பிரிவினரின் எதிர்ப்பினைச் சந்தித்துள்ளது. பெண் ஒருவர் தனது எக்ஸ் பக்கதில், “ஆஷிகா ரங்கநாத் போன்ற இளம் கன்னட நடிகைகளை தூதுவராக நியமிக்காமல், ஏன் ஒரு இந்தி நடிகையை தூதவராக நியமித்து ஊக்குவிக்க வேண்டும்.” என்று தமன்னாவின் நியமனத்துக்கு தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் வியாழக்கிழமை கூறுகையில், “கர்நாடகாவைத் தாண்டிய சந்தையில் மிகத் தீவிரமாக ஊடுருவதற்கு மிக அதிமான ஆலோசனைகளுக்கு பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கன்னடத் திரைத்துறையின் மீது கேஎஸ்டிஎல் ஆழமான மரியாதை வைத்துள்ளது. சில கன்னடப் படங்கள், பாலிவுட் திரைப்படங்களுக்கு கடும் போட்டியைத் தருகின்றன. மைசூர் சாண்டல் கர்நாடகாவில் சிறந்த பிராண்டாக உள்ளது. அது மேலும் வலுப்படுத்தப்படும். என்றாலும் கர்நாடகாவின் சந்தைகளைத் தாண்டி தீவிரமாக ஊடுருவுவதே கேஎஸ்டிஎல்-ன் நோக்கமாகும்.
கர்நாடகாவின் பெருமை என்பது தேசத்தின் ரத்தினம் போன்றது. எனவே பல்வேறு சந்தைப்படுத்தல் நிபுணர்களை கலந்தாலோசித்த பின்பு பிஎஸ்யு வாரியம் இந்த ராஜந்திர முடிவை எடுத்துள்ளது. வரும் 2028-க்குள் கேஎஸ்டிஎல் வருமானம் ரூ.5,000 கோடியை எட்டவேண்டும் என்பதே நோக்கம்.” என்றார்.