பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குஜராத் இளைஞர் கைது: கடற்படை, பிஎஸ்எப் ரகசியங்களை பகிர்ந்தது கண்டுபிடிப்பு

புது டெல்லி: இந்திய கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் முகவருடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் குஜராத் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்ச் பகுதியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் சஹ்தேவ் சிங் கோஹில் (28), 2023 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் மூலம் தன்னை அதிதி பரத்வாஜ் என்று சொல்லிக்கொண்ட ஒரு பாகிஸ்தான் முகவருடன் அறிமுகமானார். இதனையடுத்து கோஹில், புதிதாக கட்டப்பட்ட மற்றும் கட்டுமானத்தில் இருந்த இந்திய கடற்படை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை தளங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவருக்கு அனுப்பினார் என்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் மூத்த அதிகாரி கே.சித்தார்த் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து பேசிய சித்தார்த், “பிஎஸ்எப் மற்றும் கடற்படை தொடர்பான தகவல்களை அவர் பாகிஸ்தான் முகவருடன் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே மே 1 ஆம் தேதி கோஹில் முதற்கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது பாகிஸ்தான் முகவர், கடற்படை மற்றும் பிஎஸ்எப் கட்டுமானங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரிடம் கேட்டதை கண்டுபிடித்தோம்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோஹில் தனது ஆதார் அட்டையில் ஒரு சிம் கார்டை வாங்கி, அந்த எண்ணில் அதிதி பரத்வாஜுக்கு ஓடிபி உதவியுடன் வாட்ஸ்அப்பை செயல்படுத்தினார். அதன் பிறகு, பிஎஸ்எப் மற்றும் கடற்படை தொடர்பான அனைத்து புகைப்படங்களும், வீடியோக்களும் அந்த எண்ணில் பகிரப்பட்டன. கோஹில் வாட்ஸ் அப் மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுத்திய எண்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டவை என்பது தடயவியல் பகுப்பாய்வு மூலம் தெரியவந்தது. இதற்காக கோஹிலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூ.40,000 ரொக்கமாக கொடுத்தார்” என்று கூறினார்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில், சமீபத்திய வாரங்களில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.