மேட்டுப்பாளையம் – அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு: போராடிய மக்கள் கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் – அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர்.

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் – அன்னூர் – அவிநாசி சாலை, மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்தில் இருவழிச்சாலையாக உள்ளது. இச்சாலையில், தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் உதகை உள்ளிட்ட பகுதிகளை நோக்கி வரும் வாகனங்கள், கோவை நகருக்குள் வந்து செல்லாமல், மேற்கண்ட வழித்தடம் வழியாக விரைவாக சென்று வருகின்றன.

23 அடி அளவுடன் குறுகிய சாலையாக, இருவழித்தடமாக உள்ளதால், இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்பட்டன. இதைத் தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மேற்கண்ட 38 கிலோ மீட்டர் தூரத்தை ரூ.250 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டப்பணிக்காக மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள ஏறத்தாழ 1,432 மரங்கள் அகற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று (மே 24) காலை மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலை நடூரில் உள்ள காபி ஹவுஸ் அருகே, சாலையோரத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, “வருவாய்த் துறையினர் தங்களது நில அளவை பணியை முடிக்கவில்லை. சாலை விரிவாக்க பணிக்காக எங்கள் இடம் எவ்வளவு எடுக்கப்படும் என தெரிவிக்கவில்லை. இந்த நடைமுறையை முடித்த பின்னரே இங்குள்ள சாலையோர மரத்தை வெட்ட வேண்டும்,”என்றனர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் சின்ன காமனன் தலைமையிலான மேட்டுப்பாளையம் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள மரங்கள் தான் வெட்டப்படுவதாக, போலீஸார் தெரிவித்தனர். ஆனாலும், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 15 பெண்கள் உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சாலையோரம் இருந்த மரங்களை வெட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.