சென்னை: “தொடர்ந்து 3 நிதி ஆயோக் கூட்டங்களை நிராகரித்துவிட்டு இப்போது பிரதமர் மோடியை சந்திக்கச் செல்வது, அமலாக்கத் துறை சோதனைக்காகவா?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே தொடங்கி விட்டது. தற்போது சின்னம் கிடைத்துவிட்டதால், கட்சியினர் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 134 தொகுதிகளுக்கு 25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மட்டுமே களமிறக்க திட்டமிட்டுள்ளோம். இவர்களுக்கு என்ன தெரியும் என்று கேள்வி கேட்டால், நிச்சயம் உங்களை சிதற அடித்து விடுவார்கள். அந்த வகையில் 2026 தேர்தல் தமிழ் தேசியர்களுக்கான களம். எங்களுக்கான களம். மாற்று அரசியலை விரும்புகிற மக்களுக்கான களமாகும்.
பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு சூழல்கள் இருந்தன. மத்திய அரசு நமக்கு நிதி தரவில்லை, அதனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று கூறிக்கொண்டிருந்த காலத்தில் பிரதமரை சந்தித்து இருக்கலாம். ஆனால், தொடர்ந்து 3 நிதி ஆயோக் கூட்டங்களை நிராகரித்துவிட்டு இப்போது பிரதமரை சந்திக்கச் செல்வது, அமலாக்கத் துறை சோதனைக்காகவா என்பது குறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.
ஒருவேளை, சந்திரபாபு நாயுடு அல்லது நிதிஷ் குமார் இருவரில் யாரேனும் ஒருவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டால், திமுக தனது 22 உறுப்பினர்களோடு ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்போடு திமுகவுடன் பாஜக இணக்கமாக இருக்கிறது. அந்த மாதிரியான சூழல் வந்தால் பாஜகவை ஆதரிப்போம் என்ற வகையில் திமுகவும் இணக்கமாக இருந்து வருகிறது. இல்லையேல், பாகிஸ்தான் போரை ஆதரித்து பாஜகவின் முதல்வர்களே பேரணி நடத்தாதபோது, தமிழக முதல்வர் ஏன் அவசரமாகப் பேரணி நடத்த வேண்டும்? இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பினார்.