Niti Aayog: "இது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது!" – நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் உரை!

நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. பல மாநில முதலமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

MK Stalin
MK Stalin

ஸ்டாலின் பேசுகையில், “சமத்துவம் மற்றும் சமூகநீதி அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிதான் எங்களுடைய தொலைநோக்குப் பார்வை. ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற அந்தக் குறிக்கோளுக்குப் பெயர்தான் திராவிட மாடல்! எங்களது அரசில் – 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, செயலாற்றி வருகிறோம். குறிப்பாக, அண்மைக் காலங்களில் ஆண்டுதோறும் 8 விழுக்காட்டிற்கும் மேலான வளர்ச்சி. கடந்த ஆண்டு நாட்டிலேயே அதிகமாக 9.69 விழுக்காடு வளர்ச்சி என்ற பாய்ச்சலில், இந்திய விடுதலையின் நூற்றாண்டில் (2047-இல்), 4.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற சவாலை எங்கள் முன் வைத்துக்கொண்டு உழைத்து வருகிறோம்! இந்தியாவின் இலக்கான 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், எங்களது பங்களிப்பு வலுவாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் தொழில்மயமாகியுள்ளது. ஆட்டோமொபைல் முதல் பசுமை ஹைட்ரஜன் வரை, அனைத்து வளர்ந்து வரும் துறைகளிலும் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளோம்.

இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 விழுக்காடு பெண் பணியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 18 லட்சம் குழந்தைகளுக்குப் பயனளிக்கும் காலை உணவுத் திட்டம், ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’, பெண்கள் இதுவரை 694 கோடி இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ள விடியல் பயணத் திட்டம், பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு தோழி விடுதிகள், 40 லட்சம் இளைஞர்களுக்கும் மேலாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியுள்ள ‘நான் முதல்வன்’, உயர்கல்வியை ஊக்குவிக்கும் ‘புதுமைப் பெண்’ – ‘தமிழ்ப் புதல்வன்’, கடந்த நான்கு ஆண்டுகளில் 30 புதிய தொழிற்பூங்காக்கள், தகவல் புரட்சிக்கு அடித்தளமாக 16 புதிய சிறிய டைடல் பூங்காக்கள்.

MK Stalin
MK Stalin

இப்படி, எங்களுடைய திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இத்தகைய திட்டங்களால்தான், நகரமயமாக்கலில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. அதிகரித்து வரும் இந்த நகர்ப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள், நல்ல உட்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை வழங்குவது நம்முடைய கடமை. நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம்.

‘அம்ருத் 2.0’ திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவையாகும். இது போன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். கங்கை நதியை மேம்படுத்துவதிலும், மீட்டெடுப்திலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஆறுகள் நமது நாட்டின் உயிர்நாடியாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க இதேபோன்ற திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

MK Stalin
MK Stalin

அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள். 2047-ஆம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது. கடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில், பிரதமர் ‘மாநிலங்கள் மக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதால், இந்தத் தொலைநோக்குப் பார்வையை அடைவதில் மாநிலங்கள் தீவிர பங்கு வகிக்கின்றன’ என்று பேசியிருந்தார். அவரது தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, கூட்டுறவு கூட்டாட்சி என்பது அவசியமான அடித்தளமாகும். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, ஒன்றிய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

‘P.M.ஸ்ரீ’ திட்டம் தொடர்பான கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் ஒன்றிய நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் R.T.E. கீழ் (கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ்) படிக்கும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது. எனவே, தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்குமாறு நான் உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Tamilnadu CM MK Stalin
Tamilnadu CM MK Stalin

மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியானது எப்போதும் போராடி – வாதாடி – வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும். இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும். கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால், இந்தப் பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசும் – மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகை, தொடர்ந்து உயர்ந்து வருவதும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது. ஒருபுறம் – ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள். மறுபுறம் – ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. எனவே, ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும். இதனை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

Tamilnadu Chief minister MK Stalin
Tamilnadu Chief minister MK Stalin

நிறைவாக, சிறப்பான இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பினை அளித்ததற்காக, நிதி ஆயோக் அமைப்பிற்கு என் நன்றி. அனைத்து மக்களும் வளமுடன் வாழ்ந்திடும் வகையில், அனைத்து பண்பாடுகளும் செழித்திடும் வகையில், பன்முகத்தன்மை கொண்ட – வலிமையான நாடாக இந்தியா திகழ்ந்திட, தமிழ்நாடு தனது சிறந்த பங்களிப்பை என்றும் வழங்கிடும்!தற்சார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போதுதான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்! அதற்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.