சென்னை: புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூ.81 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டுள்ள புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தினை இன்று (மே 25) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “800 ஆண்டுகள் பழமையான கங்காதேசுவரர் திருக்கோயிலுக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.4.82 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. சட்டமன்ற அறிவிப்பின்படி இத்திருக்கோயிலுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வரும் ஜனவரி மாதத்திற்குள் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் தங்கத்தேர் ஒப்படைக்கப்படும். இத்திருக்கோயிலின் சிதிலமடைந்த திருத்தேருக்கு பதிலாக ரூ.81 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேரும், ரூ.15.40 லட்சம் மதிப்பில் தேர் பாதுகாப்பு கொட்டகையும் அமைக்கப்பட்டு இன்றையதினம் வெள்ளோட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி மேயரின் முழு ஒத்துழைப்போடு மாநகராட்சி நிதி ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் இத்திருக்கோயிலின் திருக்குளம் சீரமைக்கப்பட்டும், திருக்கோயில் நிதி ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நந்தவனமும், ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் காரியகூடமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் மின் அலங்காரம், அன்னதானக் கூடம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு அமைக்கப்படவுள்ளன.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம், அருள்மிகு தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.87 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் செய்யப்பட்டு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஏற்பட்ட பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் திருப்பணிகளும், குடமுழுக்குகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 2,970 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ரூ.7,674 கோடி மதிப்பீட்டிலான 7,560.73 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நவீன ரோவர் கருவியின் மூலம் திருக்கோயில் நிலங்களை அளவிடும் பணிகளில் இதுவரை 2,01,158 ஏக்கர் நிலங்கள் அளவிடப்பட்டு 1,24,111 எல்லைக் கற்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5,970.26 கோடி மதிப்பில் 25,813 பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் உபயதாரர்கள் மட்டும் ரூ.1,351 கோடி மதிப்பிலான திருப்பணிகளை செய்து தருகின்றனர். இது உபயதாரர்கள் இந்த அரசின் மீதும், இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உபயதாரர்கள் நிதியாக ரூ.200 கோடி கூட கிடைக்கப் பெறவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
ஆகம விதிகள் அல்லாத திருக்கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக துறை சார்ந்த வழக்கறிஞர்களோடும், நீதிமன்றங்களில் இதுதொடர்பான வழக்குகளில் ஆஜரானவர்களோடும் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளோம். வெகு விரைவில் ஆகம விதிகள் அல்லாத திருக்கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான பணிகள் முழு வீச்சில் தொடங்கப்படும். அதேபோல் ஆகம விதிகளுக்கு அமைக்கப்பட்ட குழுவில் ஒரு நபருக்கு பதிலாக வேறொருவரை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளையும் முதல்வர் ஸ்டாலின் உடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்று நபர் குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். அந்த பணி முடிவுற்றவுடன் ஆகம விதிகளை கண்டறிகின்ற குழுவின் பணி தொடங்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்படும் 25 பள்ளிகள், 9 கலைக் கல்லூரிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 10 கல்லூரிகளில் 22,807 மாணவ, மாணவியரும் கல்வி பயின்று வருகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் பயில்வதற்கு ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரப்பெறுகின்றன. மருதமலை, திருக்கோயில் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு கடந்த நாண்காண்டுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.140 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்ற மாணவர்களில் இத்தாண்டு 206 மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலம் டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி போன்ற தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் சிந்தையில் உதித்திட்ட திட்டங்களான படைப்பகம் மற்றும் கல்விச் சோலை ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் 5 பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடங்கவுள்ளோம். முதல்வரின் படைப்பகம் மற்றும் கல்விச் சோலை திட்டங்கள் தொடங்கிய ஆறு மாதத்திற்குள்ளாகவே அதில் பயின்ற 6 மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெற்றுபெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை நடத்துகின்ற அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளிகள் மூலம் ஆண்டிற்கு சுமார் 300 நபர்கள் திருக்கோயில் சார்ந்த அர்ச்சகர், ஓதுவார் போன்ற பணியிடங்களுக்கு தயார்படுத்தி கொண்டிருக்கின்றோம்.
எந்த திருக்கோயிலின் குடமுழுக்கு என்றாலும் காலை நேரத்தில் தான் நடக்கும், தமிழகம் மட்டுமின்றி பிற திருக்கோயில்களுக்கும் குடமுழுக்கிற்கு நாள், நேரம் குறிக்கின்ற வல்லுநர்களாக ராஜா பட்டர், பிச்சை குருக்களும் திகழ்கின்றனர். அவர்கள் திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த முகூர்த்த நேரம் காலை 6 மணியிலிருந்து 7.30 மணி வரை குறித்து கொடுத்தனர். அது சம்பந்தமான சர்ச்சையினால் ஒரு சிலர் நீதிமன்றத்தை அணுகினார்கள்.
நீதிமன்ற தீர்ப்பில் 5 நபர்கள் கொண்ட குழு அமைத்திட உத்தரவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் 5 நபர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் போத்தி ஒருவரும், ராஜா பட்டர், பிச்சை குருக்கள், சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் தந்திரி ஒருவர் மற்றும் வழக்கு தொடர்ந்தவர் ஒருவர் என 5 நபர்கள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. சபரிமலை கோயில் தந்திரி அவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். இக்கூட்டத்தில் நான்கு நபர்கள் முகூர்த்த நேரம் என ஒரே நேரத்தை குறிப்பிட்டுள்ளனர். வழக்கு தொடர்ந்தவர் மட்டுமே அவருடைய நிலைப்பாட்டிலேயே நின்று கொண்டிருக்கின்றார். இதனை நீதிமன்றத்திற்கு தெரிவித்து அதன் வழிகாட்டுதலோடு குறித்து தரப்படும் முகூர்த்தத்தில் திருச்செந்தூர் குடமுழுக்கு நடைபெறும்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் அறுபடை வீடுகளிலும் தொடர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்செந்தூரில் ஜுலை மாதம் 7 ஆம் தேதியும் திருப்பரகுன்றத்தில் ஜுலை மாதம் 14 ஆம் தேதியும் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு பழநியில் குடமுழுக்கு நடைபெற்றது. திருத்தணியில் பெருந்திட்ட வரைவின் கீழ் இரண்டு கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
மருதமலையில் மின்தூக்கி அமைக்கப்பட்டு வருவதோடு, ஆசியாவிலேயே மிக உயரமாக 184 அடியில் முருகன் சிலை அமைக்கப்படவுள்ளது. சுவாமிமலையில் மின்தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்படி அறுபடை வீடுகள் மற்றும் அறுபடை அல்லாத வீடுகளுக்கும் திருப்பணிகள் மேற்கொண்டு தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு மென்மேலும் புகழ் சேர்க்கின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது.
‘நான் பிடிப்பது வெள்ளை குடையும் அல்ல, காவிக் குடையும் அல்ல’ என்று முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் தெளிவாக தனது பதிலை கூறியுள்ளார். அவர் எந்நாளும் தூக்கி பிடிப்பது உரிமைக் குரலே. அந்த உரிமைக் குரலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராமல் ஒன்றியத்தின் இரும்பு மனிதர் என போற்றப்படுகின்ற முதல்வர் ஸ்டாலின் புதுடெல்லியில் அமர்ந்து மேற்கூறிய பதிலை சொன்னார் என்றால் அவரது குரல் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். உறவுக்கும் கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாரக மந்திரத்தை நெஞ்சிலே நிறுத்தி இருப்பவர் இரு வர்ண கொடியோடு பீடுநடை போடுவார்.
தமிழிசை பேசுவதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. அவர் இப்படி ஏதாவது பேசி, அங்கே அங்கீகாரம் பெற நினைக்கின்றார். அவருக்கு ஒரு சவாலாகவே சொல்கிறேன். இவ்வளவு ஆற்றல் படைத்த அவர் சென்னையில் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அனைத்திலும் தொடர்ந்து அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தது திராவிட முன்னேற்றக் கழகம். தற்போது அவர் சென்னையில் நிற்கபோவதாக தகவல்கள் வருகின்றன. நின்று பார்க்கட்டும், திராவிட முன்னேற்றக் கழகம் வென்று காட்டும்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், இணை ஆணையர் ஜ.முல்லை, உதவி ஆணையர் க.சிவக்குமார், திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் டாக்டர் பெ.வெற்றிகுமார் மற்றும் அறங்காவலர்கள், எழும்பூர் வி.சுதாகர், மாமன்ற உறுப்பினர் பரிதி இளம்சுரிதி, திருக்கோயில் செயல் அலுவலர் எம்.ஆச்சி சிவப்பிரகாசம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.