புதுடெல்லி: இந்தியா தற்போது ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது. இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
10வது நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியம் கூறியதாவது: நான் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு. நாம் இப்போது 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துள்ளோம். இது எனது தரவுகள் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள். இந்தியா இப்போது ஜப்பானை விட பெரியது.
அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இப்போது நமக்கு முன்னாள் உள்ளன. திட்டமிட்டு சிந்திக்கப்படுவதில் நாம் உறுதியாக இருந்தால் இன்னும் 2 – 3 ஆண்டுகளில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவது பெரிய விஷயம் இல்லை.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படாமல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியது தொடர்பாக பதில் அளித்த சுப்பிரமணியம், “எதிர்கால அமெரிக்க வரிகளின் பிரத்தியேகங்கள் தெளிவாக இல்லை. ஆனால் இந்தியா இந்த இயக்கவியல்களைப் பொருட்படுத்தாமல், தனது உற்பத்தி செலவு போட்டிகளை வழங்கும்.
வளர்ந்து வரும் சர்வதேச பொருளாதார பரப்பில், ஒரு மாற்று உற்பத்திக்கான மையமாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வரும் வேளையில் இந்த மைல்கல் நிலை எட்டப்பட்டுள்ளது. சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் தனது பங்கினை ஆழப்படுத்தவும், தனது மேக் இன் இந்தியா உந்துதலின் கீழ் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் இந்தியா முயற்சித்து வரும் வேளையில் இந்தப் பொருளாதார முன்னேற்றம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது” என தெரிவித்தார்.