கீவ்: ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய வான்வழித்தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போரில் நடந்திருக்கும் மிகப்பெரிய வான்வழித்தாக்குதல் இதுவாகும்.
ரஷ்யாவின் வான்வழித்தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கீவ், கார்கிவ், மைக்கோலைவ், டெர்னோபில் மற்றும் கிமெல்னிட்ஸ்கி என பரவலான அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனிடையே உக்ரைன் விமானப்படை 267 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. என்றாலும், உக்ரைனுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட உள்கட்டமைப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கீவ்வில் 11 பேர் காயமடைந்துள்ளனர், கிமெல்னிட்ஸ்கி-ல் நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிவ்-ஐ குறிவைத்து வெள்ளிக்கிழமை நடந்த ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த வான்வெளித்தாக்குதல் நடந்துள்ளது.
தெற்கு உக்ரைனின் மைக்கோலைவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 77 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார். ஐந்து பேர் காயமடைந்தனர் என்று பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஒரு அப்பார்ட்மெண்ட் தாக்கப்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையின் கீழான அமெரிக்காவின் மவுனத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக வலுவான தடைகள் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “அமெரிக்காவின் மவுனமும், உலகின் பிற நாடுகளின் மவுனமும் மட்டுமே புதினை ஊக்குவிக்கின்றது. இதுபோன்ற ரஷ்யாவின் ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலும், ரஷ்யா மீதான பொருளாதாரத்தடைக்கான போதுமான காரணங்களே.” என்று தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மர் கூறுகையில், “அழுத்தம் இல்லாமல் இங்கே எதுவும் மாறாது. ரஷ்யாவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற மரணங்களை நிகழ்த்தவே படைகளை உருவாக்கும். ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறன் இருக்கும் வரை ரஷ்யா தொடர்ந்து போராடும்” என்று தெரிவித்தார்.
மறுபுறம், 95 உக்ரைனிய ட்ரோன்களை தாக்கி அழித்ததாகவும், அவைகளில் 12 ட்ரோன்கள் மாஸ்கோ அருகே இடைமறிக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் வழியுறுத்தி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கைதிகள் பறிமாற்றம் குறித்து முடிவுக்கு வந்த இரு தரப்பினரும், தலா 1000 பேரை பறிமாற்றிக்கொண்டுள்ளனர்.