புதுடெல்லி: டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது. இதில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மேற்கூரை ஒன்றில் மழைநீர் தேங்கி இடிந்து விழுந்தது. இதனால் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது.
மழைநீர் தேங்கி கூரை இடிந்து விழும் வீடியோவை கேரளா காங்கிரஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அத்துடன், ஒரு தூரலுக்கு பின்பு டெல்லி விமான நிலையத்தில் விகாஸ் (வளர்ச்சி) நிரம்பி வழிகிறது எனப் பதிவிட்டுள்ளது. பகிரப்பட்ட வீடியோ விமான நிலையத்தில் இருந்த ஒரு பார்வையாளரால் எடுக்கப்பட்டுள்ளது. அதில் டெல்லி விமானநிலையத்தில் மழை பெய்துகொண்டிருக்கும் போது ஒரு மேற்கூரையில் மழை நீர்தேங்கி நிற்கிறது. இதனால் அந்தக் கூரையில் கிண்ணம் போன்ற அமைப்பு உருவாகி மழைநீரைத் தாங்கிநிற்கிறது. ஒரு கட்டத்தில் மழைநீரின் கனம் தாங்காமல் கூரை கிழிந்து விழ மழை நீர் புகுந்து விடுகிறது.
இந்தச் சம்பவத்துக்கு, டெல்லி சர்வதேச விமான நிலையம் லிமிட், தீவிர வானிலை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானநிலையத்தின் வேறு எந்தக் கட்டமைப்பும் பாதிக்கப்படவில்லை என்று பதில் அளித்துள்ளது. டிஐஏஎல் அளித்துள்ள விளக்கத்தில், “தீவிரமான நிலைமைகளுக்கான இயற்கையான எதிர்வினையின் ஒரு பகுதியாகவும், அதிகப்படியான நீர் தேக்கத்தைத் தடுக்கவும், முனையம் 1-ன் வருகைப்பகுதியில் வெளிப்புறத்தில் உள்ள இழுவிசை துணி அதிக அழுத்தம் காரணமாக கிழிந்துவிட்டது. இதனால் தண்ணீர் உள்ள வர வழிவகுத்துவிட்டது. இதுதவிர விமானநிலையத்தின் வேறு பகுதிகள், கட்டமைப்புகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக தேசிய தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் புழுதிப்புயலைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அத்துடன் மணிக்கு 60 முதல் 100 கி. மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுமையம் கணித்திருந்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பெய்த கனமழையில் டெல்லி விமானநிலையத்தின் முனையம் 1-ன் இதேபோன்று மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முனையம் 1-ல் இருந்து பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல சேவைகள் பிற முனையத்துக்கு மாற்றப்பட்டன.
இந்தச் சம்பவம் பல அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி அரசை கேலி செய்து ஊழல்குற்றச்சாட்டு சுமத்தின.