கோவை: பில்லூர் அணை வேகமாக நிரம்புவதால் இன்று நள்ளிரவு அணையின் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால் பவானி அற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வருகிறது. இன்று(25/05/25) நள்ளிரவு 12 மணிக்கு அணையின் 2 மதகுகள் திறக்கப்பட உள்ளன. எனவே பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நடுமலை ஆறு மற்றும் கூழாங்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரண மாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆழியாறு கவியருவி, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.