பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? – முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, கோவா, டெல்லி, ஹரியானா, அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, பிஹார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள், துணை முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 20 முதல்வர்கள், 18 துணை முதல்வர்கள் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மகாராஷ்டிர துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பணிந்தது. கடந்த 10-ம் தேதி இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் தொடர்பாக எடுத்துரைக்க 33 நாடுகளுக்கு எம்பிக்கள் குழுக்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

ஆபரேஷன் சிந்தூர், அதன்பிறகு ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரை வெற்றி பெறச் செய்த முப்படைகளுக்கும் கூட்டத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமைக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான தீர்மானத்தை மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூட்டத்தில் முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

நாடு முழுவதும் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அப்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பான தீர்மானம் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3-வது முறையாக கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி பதவியேற்றது. புதிய அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்து இருக்கிறது. கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

வரும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தும் அனைத்து மாநிலங்களிலும் யோகா தின விழாவை பிரம்மாண்டமாக நடத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முதல்வர்கள் அவரவர் மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைத்தனர். இதில் சிறந்த திட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்துக்கு பிரகு மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தின. இதற்காக பிரதமர் மோடிக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முப்படைகளின் வீர, தீரத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் சாதி அரசியலை ஊக்குவிக்கவில்லை. எனினும் நலிவுற்ற மக்களை மேம்படுத்துவதற்காக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.