நாட்டின் முதலாவது 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரயில்வே இன்ஜின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
குஜராத் மாநிலம் தாஹோத் நகரில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வே இன்ஜின் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 9 ஆயிரம் எச்.பி(குதிரை சக்தி) திறன் கொண்ட ரயில்வே இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலை மூலம் தயாரித்த முதலாவது 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட லோகோமோட்டிவ் ரயில் இன்ஜினை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இதற்காக வரும் 26, 27-ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்துக்கு வருகிறார். குஜராத்தின் காந்தி நகர், கட்ச், தாஹோத் பகுதியில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் அவர் கலந்துகொண்டு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் தாஹோத் நகருக்கு வந்து ரயில்வே இன்ஜின் அர்ப்பணிப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளார். ஆண்டுதோறும் இங்கு 1,200 ரயில்வே இன்ஜின்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே இன்ஜின் 4,600 டன் எடையுள்ள சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் படைத்தது. மேலும் இந்த இன்ஜின் ஏ.சி. வசதி கொண்டதாகும். மேலும், ரயில்வே இன்ஜின் பைலட்டுகளுக்காக கழிப்பறை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையால் தாஹோத் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் கட்ச் பகுதியிலுள்ள பூஜ் நகருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு பேசவுள்ளார். இந்த கூட்டத்துக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.