சென்னை: பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிய போலீஸாரை மீட்கும் வகையில் அவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை டிஜிபி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: போலீஸாரின் மன நலனை உறுதி செய்யும் விதமாக தமிழக காவல்துறையில் ‘மகிழ்ச்சி’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் மூலம் மன அழுத்தம், தற்கொலை எண்ணம், மதுபழக்கம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாதல், மன அழுத்தம் மற்றும் பதற்றம், துக்கம், குடும்பம் மற்றும் திருமண முரண்பாடு, அதீத கோப மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகளில் சிக்கிய போலீஸாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன நலனை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனநல மையங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு தேவைப்படும் போலீஸாருக்கு உரிய உதவி மற்றும் ஆதரவை வழங்குகிறது. 01.05.2025 நிலவரப்படி, சென்னை, மதுரை மற்றும் திருவாரூரில் தற்போது செயல்பட்டு வரும் 3 மையங்களிலிருந்து 2844 போலீஸார் பயனடைந்துள்ளனர். இவர்களில் ஆண்கள் 1884, பெண்கள் 960 பேராவர்.
‘மகிழ்ச்சி’ திட்டம் போலீஸாருக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை வழங்குவதன் மூலம் காவல் துறையினரின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், தனிப்பட்ட முன்னேற்றம் மற்றும் பணி செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இத்திட்டம் குறித்து காவல் நிலையங்கள் மற்றும் காவல் குடியிருப்புகளில் விளம்பரப்படுத்தப்பட்டு 4 மையங்கள் குறித்த தொலைபேசி உதவி எண்கள் (சென்னை – 6380977682, மதுரை – 7305033041, திருவாரூர் – 9342189898 மற்றும் கோயம்புத்தூர் 9500334416) அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.