ஐபிஎல் தொடரின் 69வது லீக் ஆட்டம் இன்று (மே 26) ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் வெல்பவர்கள் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்திற்கு செல்வார்கள் என்பதால், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது.
இப்போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியே பேட்டிங் செய்தது. சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்களான ரோகித் சர்மா 24, ரிக்கல்டன் 27, வில் ஜாக்ஸ் 17, திலக் வர்மா 1, ஹர்திக் பாண்டியா 26 மற்றும் நமன் தீர் 20 ரன்களும் அடித்தனர். பஞ்சாப் அணி சிறப்பாக பந்து வீசி ஓரளவு மும்பை அணியை கட்டுப்படுத்தியது. இதனால், மும்பை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. பஞ்சாப் அணி சார்பில் அர்ஷதீப் சிங், மார்கோ யான்சன், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஹர்பிரீத் ப்ரார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. பஞ்சாப்பை வீழ்த்திவிடலாம் என எண்ணிய மும்பை அணிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவர்களால் எளிதாக பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. ப்ரியான்ஸ் ஆர்யா மற்றும் ஜோஷ் இங்கிலிஷை அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இருவரும் பந்துகளை பவுண்டரிகளுக்கு சிதறடித்தனர்.
இதனால் பஞ்சாப் அணி வேகமாக இலக்கை நோக்கி சென்று 18.3 ஓவர்களிலேயே வென்றது. ப்ரியான்ஸ் ஆர்யா 62, ஜோஷ் இங்கிலிஷ் 73 ரன்களை அடித்தனர். இறுதியில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களை அடித்தார். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலின் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை (மே 27) தொடரின் கடைசி லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. பெங்களூரு அணி லக்னோ அணியை எதிர்கொள்கிறது. அதில் பெங்களூரு அணி வென்றால், இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். எனவே நாளைய போட்டியும் விறுவிறுப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் படிங்க: பட்லர் To மார்கோ யான்சன்: ஐபிஎல் பிளே ஆஃப்பை தவறவிடும் 7 வீரர்கள்!
மேலும் படிங்க: ஒரு ட்வீட் அல்லது இன்ஸ்டாகிராம் பதிவு பார்ப்பீர்கள்.. தோனி ஓய்வு குறித்து உத்தப்பா!