இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், வர்த்தகம் மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்து எங்கள் அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்.
ஆனால், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா முயன்றால், நமது நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், நாமும் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை நாங்கள் காட்டுவோம்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அமைதி எங்கள் இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல், பிராந்திய அமைதி மற்றும் செழிப்புக்கும் பங்களிக்கும். இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தின. இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சர்வதேச நாடுகளின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இறுதியில் பாகிஸ்தான் மூத்த தளபதி நேரடியாக இந்திய ராணுவ மூத்த தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10-ம் தேதி இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில்தான் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். அதே நேரத்தில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் மூன்றாவது நபருக்கு இடமில்லை என இந்தியா ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.