காந்திநகர்: பிரிவினைக்கு பின்பு, முதல் தாக்குதல் நடத்தப்பட்ட போதே, கடந்த 1947-ல் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தியா சந்திப்பது, பல தசாப்தங்களாக நாட்டைப் பாதித்து வரும் பயங்கரவாதத்தின் சிதைந்த வடிவமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 1947-ம் ஆண்டு இந்தியத் தாய்நாடு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அன்று இரவு காஷ்மீர் மண்ணில் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. முஜாஹிதீன் என்ற பெயரில் இந்தியாவின் ஒரு பகுதி பாகிஸ்தானால் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அன்றே முஜாஹிதீன் என்று அழைக்கப்பட்டவர்கள் மரண குழிக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை திரும்பப்பெறாமல் ராணுவத் தாக்குதலைத் தொடரக் கூடாது என்று சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பினார். ஆனால் அவரின் வார்த்தைகள் பின்பற்றப்படவில்லை. முஜாஹிதீன்களின் அந்த ரத்தக்களரி கடந்த 75 ஆண்டுகளாக தொடர்கிறது. பஹல்காமில் நடந்தது அதன் திரிந்த வடிவமே. இந்தியா பாகிஸ்தானை ஒவ்வொரு முறையும் தோற்கடித்துள்ளது. இந்தியாவை வெல்ல முடியாது என்று பாகிஸ்தான் புரிந்து கொண்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கை என்பது ஒரு ப்ராக்ஸி போர் இல்லை. இது பாகிஸ்தானால் நன்கு திட்டமிடப்பட்ட போர். பயங்கரவாதம் ‘ப்ராக்ஸி’ போர் இல்லை. அது உங்களின் போர் உத்தி. நீங்கள் எங்கள் மீது போர் தொடுக்கிறீர்கள்.” என்று தெரிவித்தார்.