இட்டாநகர்:
அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் கனமழை வெலுத்து வாங்கியது. இதன் விளைவாக தேசிய நெடுஞ்சாலை-13 இன் பனா-செப்பா பகுதிக்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரியில் ஏழு பேரை ஏற்றிச் சென்ற வாகனம் அடித்துச் செல்லப்பட்டு பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று இரவு கார் செப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் வியாழக்கிழமை முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது, இதனால் இயல்பு வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் பல மாவட்டங்களில் சாலைத் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.