Heinrich Klaasen Retirement: சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Heinrich Klaasen Retirement: ‘எனக்கு சோகமான நாள்’
இதுகுறித்து ஹென்ரிச் கிளாசென் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவில், “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள் எனக்கு மிகவும் சோகமான நாள் எனலாம். எதிர்காலத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு நீண்ட காலம் எடுத்தது. இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால் எனக்கு முழுமையான மன திருப்தி இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நான் முதல் போட்டியில் விளையாடியபோது, எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிகப்பெரிய பாக்கியம் கிடைத்தது. நான் சிறுவயதில் இருந்து உழைத்து கனவு கண்ட அனைத்தும்தான் அது.
View this post on Instagram
Heinrich Klaasen Retirement: குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவேன்…
நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்கும் சிறந்த நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கி இருக்கிறேன். தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடியதன் மூலம், என் வாழ்க்கையை மாற்றிய சிறந்த மனிதர்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்பளித்தது. தென்னாப்பிரிக்கா அணியின் ஜெர்ஸியை அணிவதற்கான எனது பாதை பெரும்பாலானவர்களை விட வித்தியாசமானது. மேலும் என் வாழ்க்கையில் சில பயிற்சியாளர்கள் என் மீது நம்பிக்கை கொண்டனர். அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
என் மார்பில் புரோட்டியாஸ் பேட்ஜுடன் விளையாடியது என் வாழ்க்கையில் மிகப்பெரிய மரியாதையாக இருந்தது, எப்போதும் அது அப்படியே இருக்கும். என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன், இந்த முடிவு அதற்கு உதவியாக இருக்கும். நான் எப்போதும் தென்னாப்பிரிக்கா அணியின் பெரிய ஆதரவாளராக இருப்பேன். மேலும் எனது வாழ்க்கையில் என்னையும் எனது அணியினரையும் ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Heinrich Klaasen Retirement: ஓடிஐ, டி20ஐ திடீர் ஓய்வு… தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவு
33 வயதான ஹென்ரிச் கிளாசென் கடந்த 2018ஆம் ஆண்டில் ஓடிஐ கிரிக்கெட் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு அறிமுகமானார். 2018இல் டி20 கிரிக்கெட்டிலும், 2019இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இவர் அறிமுகமானார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்த ஹென்ரிச் கிளாசென் கடந்தாண்டு ஜனவரி மாதமே ஓய்வு பெற்றார். டி20 மற்றும் ஓடிஐ கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்த அவர் தற்போது இந்த முடிவை அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி வரை முன்னேறியது. கடந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் தென்னாப்பிக்கா இறுதிப்போட்டி வரை வந்தது. அடுத்தாண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள சூழலில் கிளாசென் ஓய்வு பெற்றிருப்பது தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது.
Heinrich Klaasen Retirement: ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?
விக்கெட் கீப்பர் பேட்டரான கிளாசென் இதுவரை 60 ஓடிஐ போட்டிகளில் 2141 ரன்களையும், 58 டி20ஐ போட்டிகளில் 1000 ரன்களையும் அடித்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் 104 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். IPL, SA20, CPL, MLP லீக் போன்ற பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார் ஹென்ரிச் கிளாசென். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் இவர் டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என்றே தெரிகிறது. ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 49 போட்டிகளில் 1480 ரன்களை அடித்திருக்கும் இவர் ஒட்டுமொத்தமாக 247 போட்டிகளில் 5634 ரன்களை அடித்துள்ளார்.