IPL 2025 RCB vs PBKS: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்களின் முதல் ஐபிஎல் கோப்பைக்காக குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போடடியில் மோதுகின்றன.
IPL 2025 RCB vs PBKS: இன்றுடன் முடியும் ஐபிஎல் 2025
கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி ஐபிஎல் 2025 தொடர் கோலாகலமாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் நகரில் தொடங்கியது. தொடர்ந்து, 70 லீக் போட்டிகள் நடைபெற்றன. இடையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியதால் சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக போட்டிகள் நடைபெறவில்லை. சிறு இடைவெளிக்கு பின் லீக் போட்டிகள் தொடங்கின.
அப்போது ஒரே நாளில் குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. டெல்லியை வீழ்த்தி மும்பையும் கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் வந்தது. பிளே ஆப் சுற்றின் குவாலிபயர் 1 போட்டியில் ஆர்சிபி பஞ்சாப் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை போட்டுத்தாக்கி மும்பை குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது. குவாலிபயர் 2 போட்டியில் மும்பையை போட்டுத்தாக்கி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
IPL 2025 RCB vs PBKS: ஆர்சிபி அதிர்ச்சி
தற்போது இன்றைய போட்டியில் யார் வெற்றி முதல் கோப்பையை வெல்லப்போகிறார்கள் என்ற பரபரப்பு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் தொற்றியிருக்கிறது. இந்த சூழலில், ஆர்சிபிக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியின் அதிரடி தொடக்க வீரரான பில் சால்ட் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாக கூறப்படுகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஆர்சிபியின் பயிற்சியின்போது, பில் சால்ட் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த டிம் டேவிட்டும் உடற்தகுதியை பெற்றுவிட்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
IPL 2025 RCB vs PBKS: பில் சால்ட்டுக்கு பதில் யார்?
பில் சால்ட் ஆர்சிபியின் ஓப்பனராக 12 போட்டிகளில் 387 ரன்களை அடித்திருக்கிறார். அதுவும் அகமதாபாத் போன்ற பேட்டிங் டிராக்கில் இவரது அதிரடி ஓப்பனிங், ஆர்சிபிக்கு பவர்பிளேவில் அதிக ரன்களை பெற்று தரும். ஒருவேளை பில் சால்ட் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்றால் ஆர்சிபிக்கு பெரிய பிரச்னை ஏற்படலாம். தற்போது நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் இவருக்கு மாற்று வீரராக இருக்கிறார். இவரும் அதிரடியாக விளையாடக்கூடியவர்தான்.