'எந்த கொண்டாட்டமும் மனித உயிருக்கு நிகரானது அல்ல' – ராகுல் காந்தி

பெங்களூரு,

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.18 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு அணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக கர்நாடக பேரவை மாளிகை முதல் சின்னசாமி மைதானம் வரை பெங்களூரு அணி வீரர்களின் பேருந்து பேரணி நடத்தப்பட்டது.

பெங்களூரு அணியை வரவேற்க மைதானத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இதனிடையே, சின்னசாமி மைதானத்தின் 6-வது கேட் பகுதியில் அத்துமீறி பலர் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்.சி.பி. அணியின் ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் வேதனையளிக்கிறது. இந்த சமயத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவாகவும், முழுமையாகவும் குணமடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.

எந்த கொண்டாட்டமும் மனித உயிருக்கு நிகரானது அல்ல என்பதை இந்த சோகமான சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. பொது நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் தகுந்த முறையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். மனித உயிர்கள்தான் எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.