ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால்… இந்திய ஓடிஐ அணியின் அடுத்த கேப்டன் யார்…?

Shreyas Iyer: இந்திய அணியில் தற்போது சுக்கிரன் யாருக்கு உச்சத்தில் இருக்கிறது என கேட்டால் கோடிக்கணக்கானவர்கள் ஒரே விதமாக சொல்வது ஒருவரின் பெயரைதான்… அது ஷ்ரேயாஸ் ஐயர்தான். இவர் தனது கிரிக்கெட் வாழ்வின் 2வது உச்சத்தை அனுபவித்து வருகிறார் எனலாம்.

Shreyas Iyer: உச்சத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர் 2014ஆம் ஆண்டிலேயே முதல்தர போட்டிகளில் விளையாடத் தொடங்கிவிட்டார். 2015ஆம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். 2017ஆம் ஆண்டில் முதல்முறையாக இந்திய அணியின் விளையாடி வருகிறார். 2019ஆம் ஆண்டில் ஐபிஎல் கேப்டன்ஸியை பெற்றார். டெல்லி அணி பல ஆண்டுகளுக்கு பின் 2019இல் பிளே ஆப் வந்தது, 2020இல் இறுதிப்போட்டி வரை வந்தது, இவர் கேப்டன்ஸியில்… 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக 530 ரன்களை குவித்திருந்தார்.

Shreyas Iyer: திடீரென பாதளத்திற்கு சென்ற ஷ்ரேயாஸ்

இப்படி உச்சத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயரை 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் பிசிசிஐயால் வெளியேற்றப்பட்டார். அப்போது தொடங்கியது அவரது சரிவு. அதன்பின், பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெறவில்லை. மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட் பக்கம் சென்றார். மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்கினார். 

Shreyas Iyer: ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்த முரட்டு கம்பேக்

அந்த ரஞ்சி சீசனில் ஷ்ரேயாஸ் ஐயரின் சராசரி 68.57 ஆக இருந்தது. ரஞ்சியில் அவரது வாழ்நாள் சராசரி கூட 50 கிடையாது. அந்த தொடரில் அவர் இரட்டை சதம் வேறு அடித்திருந்தார். அதையடுத்து, சையத் முஷ்டாக் அலி தொடரில் 188 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 சராசரியுடன் விளையாடினார். அடுத்து விஜய் ஹசாரே தொடரையும் விட்டுவைக்கவில்லை. 5 போட்டிகலில் 325 ரன்களை 131.58 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். தொடர்ந்து, 2024 ஐபிஎல் தொடரில் இவர் தலைமையில்தான் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. 

அதன்பின் இவர் சாம்பியன் டிராபி தொடருக்காக இந்திய அணியில் தேர்வானார். அதற்கு முன் இங்கிலாந்து உடனான ஒருநாள் போட்டியில் இவர் இடம்பெற்றாலும் பிளேயிங் லெவனில் இடமில்லாத சூழல் இருந்தது. அப்போது விராட் கோலிக்கு திடீரென காயம் ஏற்படவே, இவருக்கு வாய்ப்பும் திடீரென கிடைத்தது. 

Shreyas Iyer: இந்திய அணியிலும் இடம் உறுதியானது!

கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் ரன்களை குவித்தார், ஒருநாள் அணியில் தனது இடத்தை மீண்டும் நிரந்தரமாக்கினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பல முக்கிய போட்டிகளில் ரன்களை குவித்து இந்தியா சாம்பியன் பட்டத்தை பெற வழிவகை செய்தார். இந்திய அணி (Team India) சார்பில் அந்த தொடரில் திக ரன்களை அடித்தவர் அவர்தான், ஒட்டுமொத்தமாக 2வது இடம். அதாவது 5 இன்னிங்ஸில் 243 ரன்களை அவர் அடித்திருந்தார். மீண்டும் இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலில் இடம்கிடைத்தது.

Shreyas Iyer: 11 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் கிங்ஸ்…

இந்த சூழலில் தற்போது 2025 ஐபிஎல் தொடரில் அதிகமான Uncapped வீரர்களை வைத்துக்கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை வரவழைத்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். அதாவது பஞ்சாப் கிங்ஸ் இதற்கு முன் 2 முறைதான் பிளே ஆப் வந்திருந்தது, அதில் ஒரு முறை தான் (2014) இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. 11 ஆண்டுகள் கழித்து தற்போது பஞ்சாப் கிங்ஸ் இவர் தலைமையிலேயே இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. அந்தளவிற்கு ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஸி சிறந்து விளங்கி வருகிறது. 

Shreyas Iyer: மீண்டும் டி20ஐயில் ஷ்ரேயாஸ் ஐயர்

இந்நிலையில் இவர் எப்போது இந்திய அணியின் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் இடம்பிடிப்பார் என்ற கேள்வி எழுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இவரது பெயர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ ஷ்ரேயாஸ் ஐயரை வெறும் வையிட் பால் வீரராக மட்டுமே பயன்படுத்த திட்டமிடுவது போல் தெரிகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக 2023 டிசம்பரில் டி20ஐ போட்டியை விளையாடியிருக்கிறார். எனவே இவரை தற்போது இந்திய டி20 அணிக்குள் கொண்டுவந்தால் நிச்சயம் 2026 டி20 உலகக் கோப்பையையும் வென்றுவிடலாம் என பிசிசிஐ திட்டமிடுகிறது.

Shreyas Iyer: இந்திய கேப்டனாகும் ஷ்ரேயாஸ் ஐயர்…? 

அதே நேரத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு (Rohit Sharma) பின் கேப்டன்ஸியை ஷ்ரேயாஸ் ஐயருக்கு கொடுக்கவே அதிக வாய்ப்புள்ளது. தற்போது டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவும், டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மான் கில்லும் உள்ளனர். ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தொடர்வார் என்றே தெரிகிறது. 2027 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா விளையாடுவாரா அல்லது அதற்கு முன்னரே ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வியும் மக்கள் இடத்தில் உள்ளது. அப்படியிருக்க, ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த பின்னர் இந்திய அணியின் ஒருநாள் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.