உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பிளேயிங் லெவனை உறுதி செய்த டெம்பா பவுமா

லார்ட்ஸ்,

டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின.

இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது. இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (புதன்கிழமை) இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். கோப்பையை தக்கவைக்க ஆஸ்திரேலிய அணியும், நீண்ட காலமாக ஐ.சி.சி. கோப்பையை வெல்ல போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன்ஸ் டிராபியை மட்டும் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி அதன்பிறகு இதுவரை ஐசிசி நடத்திய எந்தவொரு சர்வதேச கோப்பையையும் கைப்பற்றியதே இல்லை. இந்தாண்டு முழுவதும் இதுவரை வெற்றியே பெறாத அணிகள் எல்லாம் வெற்றி பெற்ற நிலையில், குறிப்பாக ஹோபர்ட் ஹாரிகேன்ஸ், ஆர்சிபி அணிகள் சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் அவர்களைப் போல தென்னாப்பிரிக்க அணியும் சாம்பியன் பட்டம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி பல முறை தங்களது கைகளில் இருந்த வெற்றியை எதிரணியிடம் கொடுத்துள்ளது. ஆனால், டெம்பா பவுமா கேப்டன்சிக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட் புத்தெழுச்சி பெற்றுள்ளது. அவரது கேப்டன்சியில் இதுவரை 9 போட்டிகளில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் மட்டுமே டிரா செய்துள்ளது. கேப்டனாக டெம்பா பவுமா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையவில்லை.

அந்த பெருமையுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது. அதேவேளை கம்மின்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் விவரம்:

ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின் (விக்கெட்கீப்பர்), மார்கோ ஜான்சன், கேஷவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.