ICC World Test Championship Final 2025: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் நான்காம் நாளான இன்று (ஜூன் 14), தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எய்டன் மார்க்ரம் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
South Africa WTC: ஆஸ்திரேலியாவை அடக்கிய தென்னாப்பிரிக்கா
2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக ஸ்டார்க் 58 ரன்களை அடித்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4, இங்கிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆஸ்திரேலியா 282 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. நேற்று இரண்டாவது செஷனிலேயே தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தொடங்கியது. அதிகபட்சமாக மார்க்ரம் 137 ரன்களையும், டெம்பா பவுமா 66 ரன்களையும் அடித்தனர். 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள், ஹசில்வுட் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியாவை விட 74 ரன்கள் பின்தங்கியிருந்தாலும் சிறப்பான பேட்டிங்கின் மூலம் தென்னாப்பிரிக்கா இந்த கோப்பையை வென்றிருக்கிறது அதுவும் நான்காவது இன்னிங்ஸில் மார்க்ரம் சதம் அடித்ததும், கேப்டன் பவுமா தொடை பகுதி காயத்தின் வலியுடன் 66 ரன்களை அடித்தும் இந்த இறுதிப்போட்டியில் மிக முக்கியமானது எனலாம்.
South Africa WTC: ஆட்ட நாயகன் மார்க்ரம்
மேலும், ரபாடா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல், முதல் இன்னிங்ஸில் 8 ஓவர்களை வீசி விக்கெட் எடுக்காத லுங்கி இங்கிடி, இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித், வெப்ஸ்டர், கம்மின்ஸ் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை முழுவதுமாக தென்னாப்பிரிக்காவின் பக்கம் கொண்டுவந்தார். அதேபோல், முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித், 2வது இன்னிங்ஸில் கடைசியாக 10வது விக்கெட்டாக ஹசில்வுட் ஆகியோரை மார்க்ரம் ஆட்டமிழக்கச் செய்தார். இந்த 2 விக்கெட்டுகளும் முக்கியமானதாகும். இதனாலேயே அவருக்கு இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
South Africa WTC: தென்னாப்பிரிக்காவுக்கு எவ்வளவு பரிசுத்தொகை?
1998 ஐசிசி நாக்அவுட் கோப்பையை வென்ற பிறகு 27 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா இப்போதுதான் ஐசிசி பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஐசிசி வழங்கி உள்ள பரிசுத்தொகை விவரத்தை இங்கு காணலாம். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதன் மூலம் 3.6 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசுத்தொகையாக அளித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 31.05 கோடியாகும். ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் தோற்றதால் 2வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 2.16 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.18.63 கோடி பரிசுத்தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐசிசி உலக சாம்பியன்ஷிப் சுழற்சியில் 3வது இடத்தை பிடித்த இந்தியாவுக்கு ரூ.12.42 கோடி பரிசுத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.