சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் போலீஸார் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்பவர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த விஜயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது மகளை மீட்பதற்காக தனுஷின் வீட்டுக்கு வந்த விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் அங்கிருந்த தனுஷின் 17 வயது தம்பியை காரில் கடத்தியதாக புகார் எழுந்தது.

இந்த கடத்தலுக்கு கே.வி.குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும், ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் ஆகியோரும் உதவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெகன்மூர்த்தி மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் இவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.

இந்நிலையில், ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் ராம்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கே.சிங் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. ‘உள்நோக்கத்துடன் வழக்கு’ அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆஜராகி, ‘‘கடத்தப்பட்ட சிறுவன், மனுதாரரின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்படவில்லை. இந்த கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, மனுதாரர் மீது உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது: இந்த வழக்கில் மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அவருக்கு முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸார் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். இதற்கிடையே, ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டிருந்தால், ‘சாட்சிகளை கலைக்க மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்று அவரிடம் உத்தரவாதம் பெற்று, ரூ.25 ஆயிரத்துக்கான பிணை பத்திரத்துடன் அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.