நுகர்வு கலாசாரம் கற்பனை செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: திரவுபதி முர்மு பேச்சு

பரேலி: கோவிட் பெருந்தொற்றுநோயானது நுகர்வு அடிப்படையிலான கலாசாரம் மனிதகுலத்திற்கு மட்டுமின்றி, பிற உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கற்பனை செய்து பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என எச்சரிக்கை விடுத்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் இன்று (ஜூன் 30, 2025) நடைபெற்ற இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடிரயசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “’ஈஷாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நமது கலாச்சாரமானது அனைத்து உயிரினங்களிலும் கடவுளின் இருப்பைக் காண்கிறது. கடவுள் – ஞானி – விலங்குகள் இடையேயான பிணைப்பின் நம்பிக்கை மற்றும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

மனிதர்கள் காடுகள், வனவிலங்குகளுடன் இணைந்து வாழும் முறையைக் கொண்டிருந்தனர். வனவிலங்குகளில் பல இனங்கள் அழிந்துவிட்டது. சில விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. உயிரினங்களைப் பாதுகாத்தல், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மண்வள ஆரோக்கியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணரவேண்டும். கடவுள் மனிதர்களுக்கு அளித்துள்ள சிந்திக்கும் திறன் அனைத்து உயிரினங்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். கோவிட் பெருந்தொற்று நோயானது நுகர்வு அடிப்படையிலான கலாசாரம் மனிதகுலத்திற்கு மட்டுமின்றி, பிற உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கற்பனை செய்து பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என்று மனிதகுலத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று, ‘ஒரே சுகாதாரம்’ என்ற கருத்து உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. மனிதர்கள், வீட்டு மற்றும் வனவிலங்குகள், தாவரங்கள், பரந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்துள்ளவை என்பதை இது உணர்த்துகிறது. விலங்குகள் நலனைக் கருத்தில் கொண்டு முதன்மைக் கால்நடை நிறுவனமாக, இந்திய கால்நடை ஆய்வு நிறுவனம் இந்தத் துறையில், குறிப்பாக விலங்குகள் சார்ந்த நோய்களைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.

தொழில்நுட்பமானது பிற துறைகளைப் போலவே, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பிலும் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பப் பயன்பாட்டின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்த முடியும். மரபணு திருத்தம், கருப் பரிமாற்றத் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது இந்தத் துறையில் மேலும் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.” என்று திரவுபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.