மாட்ரிட்,
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான தியாகோ ஜோட்டா (வயது 28) ஸ்பெயினில் கார் விபத்தில் சிக்கி பலியானார். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே கார் விபத்தில் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துயர விபத்தில் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் பலியானார். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வெளியான தகவலின் படி, ஜோட்டாவும் அவரது சகோதரரும் தங்களது காரில் சென்றபோது, மற்றொரு வாகனத்தை முந்தி செல்லுகையில் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையிலிருந்து விலகி தீப்பிடித்து எரிந்தது. இதன் விளைவாக இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போர்ச்சுக்கல் அணி 2019 மற்றும் 2025 இரண்டிலும் நேஷன்ஸ் லீக் கோப்பையை வெல்வதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவரது புத்திசாலித்தனமான நிலைப்படுத்தல், கோல்களை அடிப்பதில் திறமை ஆகியவற்றால் போர்ச்சுகலின் மிகவும் நம்பகமான முன்கள வீரர்களில் ஒருவராக நற்பெயரைப் பெற்றார். இவர் மேலும் லிவர்பூல் அணியிலும் நட்சத்திர வீரராக இருந்தார்.
ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரேவின் மறைவுக்குப் பிறகு போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது.